2015-09-20 16:48:00

ஞாயிறு திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


செப்.20,2015. "வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?" என்று இயேசு தன் சீடர்களைப் பார்த்து கேட்ட கேள்வியை இன்று நம்மிடமும் அவர் கேட்கக்கூடும். "நாம் ஒவ்வொருநாளும் எதைப் பற்றி பேசுகிறோம்?", "நமது ஆசைகள் என்னென்ன?"

இயேசுவின் கேள்விக்கு சீடர்களால் பதில் சொல்ல முடியவில்லை, ஏனெனில், அவர்கள் வாதாடிக் கொண்டிருந்த விடயம், அவர்களை வெட்கப்பட வைத்தது. சீடர்கள் வாதாடிக் கொண்டிருந்ததைப் போலவே, இன்று நாமும், நம்மில் யார் பெரியவர் என்று வாதித்துக் கொண்டிருக்கிறோம்.

"உனக்கு யாரைப் பிடிக்கும், அம்மாவையா, அப்பாவையா?" என்று குழந்தைகளிடம் கேட்கும் கேள்வியில், "உனக்கு யார் முக்கியம்?" என்ற கேள்வியை மறைமுகமாகக் கேட்கிறோம். நமது குடும்பங்களில் துவங்கி, உலக அரங்கு முடிய, நம்மில் யார் பெரியவர் என்ற இந்தக் கேள்வி நம்மைத் தொடர்கிறது. மனிதர்கள் நடுவில் நிலவும் இந்தக் கேள்வியை, இயேசுவும் அறிவார். அதற்கு தகுந்த ஒரு பதிலை அவர் சீடர்கள் வழியே நமக்குத் தருகிறார். அன்பின் அடிப்படையில் இந்தக் கேள்விக்குப் பதில் தேடவேண்டும் என்பதை, இயேசு வழக்கம்போல் தெளிவுபடுத்துகிறார்.

யார் பெரியவர், முக்கியமானவர் என்ற கேள்விக்கு, 'ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்' என்பது இயேசுவின் நேரடியான, ஒளிவுமறைவற்ற பதில்.

அனைவருக்கும் தொண்டராக, பணியாளராக இருப்பது எனில், நம்மிடையே வலுக்குறைந்த மக்களைப் பாராமரிப்பது என்று பொருள். கிறிஸ்தவராக வாழ நாம் பெறும் அழைப்பு, பதவியைத் தேடிச் செல்லும் அழைப்பு அல்ல. வலுவிழந்தோரைத் தேடிச் செல்வதும், அவர்களுக்குப் பணியாற்றுவதுமே, கிறிஸ்தவ அழைப்பு.

கியூபா நாட்டு மக்கள், வரலாற்றில் காயப்பட்ட மக்கள். எனினும், அவர்கள் விரிந்த கரங்களுடன் மற்றவரை வரவேற்கவும், அவர்களோடு நம்பிக்கையுடன் நடந்து செல்லவும் தெரிந்தவர்கள். நீங்கள் பெற்றுள்ள இந்த அழைப்பை இழந்துவிடவேண்டாம்.

இன்று நாம் கேட்ட நற்செய்தி நமக்கு விடுத்துள்ள கருத்தை மறந்துவிட வேண்டாம். ஒரு நாட்டின் பெருமையும், முக்கியத்துவமும் அந்நாட்டில் உள்ள வலுவற்றோருக்கு பணியாற்றுவதில் அடங்கியுள்ளது.  இந்தப் பணியில் நாம் உண்மையான மனிதத்தின் பலன்களைக் காணமுடியும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.