2015-09-20 16:33:00

கியூபா அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு அளித்த வரவேற்பு


செப்.20,2015. திருத்தந்தையே, கியூபா நாட்டு மக்களும், அரசு அதிகாரிகளும் உங்களை அன்புடனும், மரியாதையோடும் வரவேற்கின்றோம். பெரும் தியாகங்களைச் செய்துள்ள இந்த நாட்டு மக்களைப்பற்றி உங்களுக்கு உயர்ந்த மதிப்பு உள்ளதென்று எங்களுக்குத் தெரியும். இந்நாட்டு மக்களும் உங்களை ஆழமாக அன்பு செய்கின்றனர்.

'நற்செய்தியின் மகிழ்வு' மற்றும் 'இறைவா உமக்குப் புகழ்' என்ற மடல்கள் வழியே நீங்கள் விடுத்துள்ள எண்ணங்களை நாங்கள் மிக கவனமாகக் கருத்தில் கொண்டுள்ளோம். எங்கள் நாட்டின் இயற்கையைப் பாதுகாக்க, வரலாற்றில் நாங்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளோம். இனியும் தொடர்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

மனிதர்கள் தங்கள் வாழ்வு முறையிலும், உற்பத்தி முறையிலும், பொருள்களை பயன்படுத்தும் முறையிலும் மாற்றங்களை உருவாக்கவேண்டும் என்று நீங்கள் கூறியுள்ள கருத்துக்களை நாங்கள் மனதார ஆமோதிக்கிறோம்.

இவ்வாண்டு, கியூபா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே உறவுகள் துவங்கி, 80 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். திருப்பீடம் கூறிவரும் நன்னெறி விழுமியங்களை பின்பற்றுவதிலும், மதச் சுதந்திரத்தை அளிப்பதிலும் எங்கள் நாடு முழு ஆதரவு வழங்கிவருகிறது.

திருத்தந்தையே, உங்கள் வருகை எங்கள் நாட்டை இன்னும் உயர்ந்ததாக மாற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்நாட்டின் மேன்மை மிகுந்த மக்கள் அனைவரின் சார்பாக, மீண்டும் ஒருமுறை, உங்களை எங்கள் நடுவில் வரவேற்கிறேன். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.