2015-09-19 15:57:00

பொதுக்காலம் 25ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஞாயிற்றுக் கிழமை. பங்குக் கோவிலில் மறைக்கல்வி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. மறைக்கல்வி ஆசிரியர், குழந்தைகளிடம், "கோவிலில் திருப்பலி நடக்குபோது நாம் சப்தம் போடக்கூடாது. ஏன்? சொல்லுங்கள்." என்று கேட்டார். ஒரு சிறுவன் எழுந்து, "ஏன்னா, கோவில்ல எல்லாரும் தூங்கிக்கிட்டிருப்பாங்க. அதனாலதான்" என்று தயக்கமில்லாமல் பதில் சொன்னான்.

மழலையர்பள்ளி (LKG) ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்தபடியே சுற்றி வந்துகொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், "நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னாள், அக்குழந்தை. உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னாள்.

குழந்தைகள் உலகம் அழகானது. அங்கு உண்மைகள் எளிதாகப் பேசப்படும். அங்கு, கடவுளையும் எளிதாகக் காணும் கனவுகளும், கற்பனைகளும் கரைபுரண்டோடும். அந்த உலகை நாம் கடந்துவிட்டோம் என்பதால், அதை மறந்து விடவேண்டும் என்ற அவசியமில்லை. பார்க்கப்போனால், அவ்வப்போது அந்த பள்ளிக்குள் மீண்டும் சென்று, பாடங்கள் பயில்வது நம் வாழ்வை மேன்மையாக்கும். மென்மையாக்கும். இதையொத்த ஓர் ஆலோசனையை இயேசு இன்றைய நற்செய்தி வழியே நமக்குச் சொல்கிறார். இந்த வார நற்செய்தியில் இடம்பெறும் இறுதி இறைச்சொற்றொடர்களை மையமாக வைத்து, நம் ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்போம்.

மாற்கு நற்செய்தி 9: 36-37

பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்" என்றார்.

அருள்சகோதரிகள் நடத்தும் மழலையர் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. LKG மழலைகள் மேடையில் ஏறினார்கள், அழகான ஒரு நடனம் ஆரம்பமானது. “நான் காலையில் எழுவேன், பல் துலக்குவேன், சாப்பிடுவேன்...” என்று அன்றாட நிகழ்வுகளின் அட்டவணையைச் சொல்லும் ஒரு பாடல். அதற்கு ஏற்ற நடன அசைவுகள், செய்கைகள். பல் துலக்குவேன் என்று அந்தக் குழந்தைகள் பாடியபோது, எல்லா குழந்தைகளும் வலது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தனர். அனால் ஒரு குழந்தை மட்டும் இடது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தாள். அருகிலிருந்த அருள்சகோதரியிடம் அக்குழந்தையைச் சுட்டிக்காட்டினேன். அவர் அப்போது சொன்ன ஒரு தகவல், என்னை அதிகம் சிந்திக்கவைத்தது.

LKG குழந்தைகளுக்கு செய்கைகளுடன் பாடல்களைச் சொல்லித்தரும் ஆசிரியர்கள் குழந்தைகளின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருக்கவேண்டும். அதாவது, குழந்தை ஒரு செய்கையை வலது கையால் செய்யவேண்டும் என்றால், ஆசிரியர் அதை இடது கையால் செய்யவேண்டும். அதைப் பார்க்கும் குழந்தை, செய்கைகளை சரியான வழியில் செய்யக் கற்றுக்கொள்ளும் என்ற கருத்தை அந்த அருள்சகோதரி எனக்குச் சொன்னார்கள்.

அன்பர்களே, சிந்தித்துப் பார்ப்போம். நமது கண்ணாடி பிரதிபலிப்புகள், குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை பிரதிபலிப்பவர்கள். வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார், ஒரு வீட்டுத்தலைவி. நான்கு அல்லது ஐந்து வயதான அவரது மகள், அம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலறைக்குள் போனதும் விருந்தாளிகளைப் பற்றி முணுமுணுத்தார். குட்டிமகள் கூட இருக்கிறாளே என்ற எண்ணம் சிறிதும் இன்றி, வந்திருந்தவர்களை வாய் நிறைய வசைப்பாடிக் கொண்டிருந்தார், அம்மா.

விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு முன்னால், செபம் சொல்லும்மா." என்றார். "என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே" என்றாள் மகள். "அம்மா என்ன சொல்வாங்களோ, அப்படி சொல்லும்மா" என்றார் அப்பா. உடனே, மகள் கண்களை மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து, என் உயிரை எடுக்குறாங்களோ, தெரியலியே" என்று வேண்டினாள், மகள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது, செய்வது, எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்கள் ஏற்படலாம்.

இன்னொரு நிகழ்வு. ஊடக உலகம், ஒவ்வொருவர் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பதையும், குழந்தைகளிடமிருந்து அவர்களது குழந்தைப் பருவத்தை ஊடகம் எவ்விதம் பறித்துவிடுகிறது என்பதையும் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வு. ஒரு வீட்டுத்தலைவி, தன் வீட்டிற்கு வந்த தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் ஓடிக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்வில், ஒரு பிரபலமான நடிகை, கவர்ச்சிகரமாக ஆடிக்கொண்டிருக்கிறார். வீட்டுத்தலைவி தன் தோழியிடம், "என் மகளும் இதே மாதிரி ஆடுவா" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். அந்நேரம், அங்கு வருகிறாள், அந்த LKG படிக்கும் குழந்தை. ஆர்வமாய் அம்மாவிடம் போய், "அம்மா, இன்னைக்கி ஸ்கூல்ல ஒரு புது ‘ரைம்’ சொல்லித் தந்தாங்க." என்று சொல்லி, அந்த ‘ரைமை’ச் செய்கையோடு செய்து காட்டுகிறாள், சிறுமி. அம்மாவும், தோழியும் பாராட்டுகின்றனர். பிறகு, அம்மா மகளிடம், "அந்த டான்ஸ் ஆடும்மா" என்று சொல்லி தொலைக்காட்சியில் ஆடிக்கொண்டிருக்கும் நடிகையைக் காட்டுகிறார். மகளோ, "சினிமா டான்ஸ் வேண்டாம்மா. இன்னொரு ‘ரைம்’ சொல்கிறேன்." என்கிறாள். அம்மாவுக்கு கோபம். தன் தோழிக்கு முன்னால், மகள் சினிமா டான்ஸ் ஆடவில்லை என்கிற வருத்தம். "‘ரைம்’ எல்லாம் ஒன்னும் வேணாம். இந்த டான்ஸ் ஆடு." என்று மீண்டும் வற்புறுத்துகிறார் தாய். குழந்தைகளை, அவர்கள் உலகத்தில் வளர்ப்பதற்கு பதில், நம் உலகத்திற்கு, அதிலும், பளபளப்பாய், செயற்கை பூச்சுக்களுடன் மின்னும் போலியான ஊடக உலகிற்கு, அவர்களை, பலவந்தமாக இழுத்துவரும் முயற்சி இது.

அன்பர்களே, நாம் காணும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், முக்கியமாக, சிரிப்பு என்ற பெயரில் காட்டப்படும் நிகழ்ச்சிகளில், ஒரு சிறுவனோ, சிறுமியோ, அவர்கள் வயதுக்கு மீறிய கருத்துக்களைச் சொல்வதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் சொல்லும் சிரிப்புக்கள், அவர்களுக்கு புரியுமோ என்னவோ தெரியாது. ஆனால் கேட்கும் இரசிகர்கள் சிரிப்பார்கள். ஒருவேளை, தன் மகனோ, மகளோ தொலைக்காட்சியில் தோன்றவேண்டும் என்பதற்காக, பெற்றோர் இந்த வசனங்களை எழுதி, அவர்களை மனப்பாடம் செய்யச் சொல்லி, அங்கே சொல்ல வைப்பார்களோ? பாவம். இதெல்லாம் குழந்தைகளைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வழிகள். குழந்தைகள் வதைப்படலம்.

முதிர்ச்சி அடைந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்கும் நாம், நம்மைப்போல் குழந்தைகளை மாற்ற முயல்கிறோம். நம்மிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது எண்ணங்களுக்கு நேர்மாறாக, 'குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்; முடிந்தால், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்' என்று இயேசு வலியுறுத்துகிறார். இந்தப் பாடத்தை சீடர்கள் மனதில் ஆழப்பதிக்கவே அவர் ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். இயேசு, சீடர்கள் நடுவில், குழந்தையை நிறுத்தியது ஏன் என்ற பின்னணியை அலசிப் பாப்போம்.

சென்ற வாரம், இயேசு, சீடர்களிடம் இரு முக்கியமானக் கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? என்று இயேசு கேட்ட அந்த இரு கேள்விகள், சீடர்கள் மத்தியில் ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும்.

தன் கேள்விகளுக்கு விடையளித்த பேதுருவை, அதுவும் தன்னை "மெசியா" என்று அடையாளப்படுத்திய பேதுருவை இயேசு புகழ்ந்தார். பேதுரு தந்த "மெசியா" என்ற பட்டத்தில் மகிழ்ச்சி, மமதை கொண்டு மயங்கிப் போகவில்லை இயேசு. மாறாக, அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம்,  சிலுவை இவற்றைப்பற்றி பேசினார். இயேசு இவ்வாறு பேசியது, பேதுருவையும், சீடர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். தன்னைப்பற்றியும், தன் வாழ்வின் இலக்குபற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்துகொண்டார். சீடர்களிடம், தன் சிலுவையைப் பற்றி, மீண்டும் ஆணித்தரமாக பேசினார், இயேசு. சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் நாம் வாசிக்கிறோம்.

மாற்கு நற்செய்தி 9: 31-32

"மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று இயேசு தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

இயேசு, சிலுவையைப்பற்றி பேசியது அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன்? என்பது அவர்களது சிந்தனைகளை நிறைத்த எண்ணமாயிற்று.

இயேசு, அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல். ஒருவேளை அவர்கள் பேசிக்கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போடுகிறோமோ என்ற நெருடல். எனவே, தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள, "வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார்.

பதில் வரவில்லை. எப்படி வரும்? அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாயிற்றே. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்லமுடியவில்லை. அவர்களது மௌனம், அவருக்கு எரிச்சலையும், வருத்தத்தையும், ஏன் சலிப்பையும் உண்டாக்கியிருக்க வேண்டும். தன்னையும், தன் கொள்கைகளையும் சீடர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்ற வருத்தம் இயேசுவுக்குள்  இருந்தாலும், சலிப்படையாமல், மீண்டும் அவர்களுக்கு தன் எண்ணங்களைப் புரிய வைக்க முயல்கிறார்.

மாற்கு நற்செய்தி 9: 35

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.

இந்தக் கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழையமுடியாது என ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்தச் சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார்.

குழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்.

"எந்த ஒரு குழந்தையும் பிறக்கும்போது இரு இறக்கைகளுடன் சம்மனசாய் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்து மறைந்து விடுகின்றன" என்பது பிரெஞ்சு மொழியில் ஓர் அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள் இவை. கால்கள் மட்டுமல்ல, நமது எண்ணங்களும், கருத்துக்களும் வளர்ந்துவிட்டதாக நாம் எண்ணும்போது, சம்மனசுக்குரிய இறக்கைகள் மறைந்து விடுகின்றன.

அன்பர்களே, குழந்தைகளைப் பற்றி பேசும்போது,  குழந்தைப்பருவம் திருடப்பட்டு, வளர்ந்துவிட்டவர்கள் உலகில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் குழந்தைகளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வறுமைப்பட்ட பல நாடுகளில், உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களை, இவ்வேளையில் நினைத்துப் பார்க்கவேண்டும். நமது உழைப்பால், குழந்தைகளை வளர்க்க வேண்டியது நமது கடமை. மாறாக, அவர்களது உழைப்பில் நாம் சுகம் காண்பது பெரும் குற்றம். இன்றைய நற்செய்தி வழியாக இயேசு சொல்லித் தரும் பாடங்களை நாம் ஓரளவாகிலும் கற்றுக்கொள்ளும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம். குழந்தைகளைக் குழந்தைகளாகவே வாழவிடுவோம். அவர்களை நம்மைப்போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.