2015-09-19 15:48:00

கடுகு சிறுத்தாலும் – பெரியவர்களின் எதிரொலிகள், குழந்தைகள்


வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார், ஒரு வீட்டுத்தலைவி. நான்கு அல்லது ஐந்து வயதான அவரது மகள், அம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலறைக்குள் போனதும் விருந்தாளிகளைப் பற்றி முணுமுணுத்தார். குட்டிமகள் கூட இருக்கிறாளே என்ற எண்ணம் சிறிதும் இன்றி, வந்திருந்தவர்களை வாய் நிறைய வசைப்பாடிக் கொண்டிருந்தார், அம்மா.

விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு முன்னால், செபம் சொல்லும்மா." என்றார். "என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே" என்றாள் மகள். "அம்மா என்ன சொல்வாங்களோ, அப்படி சொல்லும்மா" என்றார் அப்பா. உடனே, மகள் கண்களை மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து, என் உயிரை எடுக்குறாங்களோ, தெரியலியே" என்று இறைவனிடம் வேண்டினாள், மகள்.

குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது, செய்வது, எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற எதிரொலிகள் எழலாம். சங்கடங்கள் வரலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.