2015-09-19 15:51:00

ஆப்ரிக்க முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை - ஆயர்கள் அறிக்கை


செப்.19,2015. ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளின் அரசுத் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் உண்மையோடும், நேர்மையோடும் மக்களுக்குப் பணியாற்றவேண்டும் என்பதை, தாங்கள் வலியுறுத்துவதாக, ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

நியூயார்க் நகரில், ஐ.நா. பொது அவையில், செப்டம்பர் 25 முதல் 27 முடிய நடைபெறும் பொது அமர்வில், ‘2015க்குப்பின் உலகளாவிய முன்னேற்றம்’ என்ற தலைப்பில் விவாதங்கள் இடம்பெறவிருப்பதையடுத்து, ஆயர்கள் இந்த அறிக்கையை, ஆப்ரிக்க அரசுத் தலைவர்கள், ஐ.நா. உறுப்பினர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், என்று, அனைவரின் கவனத்திற்கும் அனுப்பியுள்ளனர்.

வாழ்வு, குடும்பம், முதியோர், என்ற பல விழுமியங்களைக் கட்டிக் காத்துவரும் ஆப்ரிக்க சமுதாயம், அண்மையக் காலங்களில் இந்த மதிப்பீடுகளை இழந்து வருவது, தங்களுக்கு பெரும் கவலையைத் தருகிறது என்று குறிப்பிட்டுள்ள ஆயர்களின் அறிக்கை, இந்த மாற்றத்திற்கு, மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத் தாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

வெளியிலிருந்து ஆப்ரிக்கக் கண்டத்தை வந்தடைந்துள்ள பல கொள்கைகள், தன்னலத்தை மையப்படுத்திய முன்னேற்றத்தையே இளையோருக்கு காட்டுவதால், ஆப்ரிக்காவில், அடுத்தத் தலைமுறையினர், ஆப்ரிக்க முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை காட்டாமல் போகும் ஆபத்து உள்ளது என்று, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளனர்.

‘2015க்குப்பின் உலகளாவிய முன்னேற்றம்’என்ற தலைப்பில் ஐ.நா.பொது அவை கூடிவரும் வேளையில், செப்டம்பர் 25ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.