2015-09-18 16:22:00

திருத்தூதுப் பயணம் குறித்து, கர்தினால் பியெத்ரோ பரோலின்


செப்.18,2015. 50 ஆண்டுகளுக்குப் பின் அரசுசார் உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ள கியூபா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரு நாடுகளுக்கும், திருத்தந்தை ஒரே நேரத்தில், திருத்தூதுப் பயணம் மேற்கொண்டிருப்பதை, இரு நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

செப்டம்பர் 19, இச்சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கும் 10வது திருத்தூதுப் பயணம் குறித்து, வத்திக்கான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.

எந்த இரு நாடுகளுக்குமிடையே அரசு தரப்பு உறவுகள் முறியும்போதும், வர்த்தகத் தடைகள் உருவாகும்போதும், அதன் தாக்கங்களை, சாதாரண மக்களே அதிகம் உணர்கின்றனர் என்பதை, திருப்பீடம் உணர்ந்துள்ளதால், கியூபாவுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே இருந்துவந்த சுவர்களை நீக்கி, உறவுகளைப் புதுப்பிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடமும் முயற்சிகள் மேற்கொண்டதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

கியூபாவிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு திருத்தந்தை செல்வது, நாடுவிட்டு நாடு செல்லும் குடியேற்றதாரர்களை நினைவுறுத்துகிறது என்றும், மத்தியக் கிழக்குப் பகுதிகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேற முயற்சித்துவரும் இலட்சக்கணக்கான மக்களை நினைவுறுத்தும் வண்ணம் திருத்தந்தையின் பயணம் அமையும் என்றும் இப்பேட்டியில் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

கியூபா நாட்டில், கோப்ரே (Cobre) அன்னைமரியா திருத்தலத்திற்கு திருத்தந்தை செல்வது, வாஷிங்க்டன் நகரில், அருளாளர் ஜுனிபெரோ செர்ரா (Junipero Serra) அவர்களை புனிதராக உயர்த்துவது ஆகிய ஆன்மீக நிகழ்வுகள் குறித்துப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையின் 10வது திருத்தூதுப் பயணத்தின் சிகரமாக அமைவது, ஃபிலடெல்ஃபியா நகரில் இடம்பெறும் குடும்பங்களின் 8வது உலக சந்திப்பு மாநாடு என்பதையும் எடுத்துரைத்தார்.

நியூயார்க் நகரில், ஐ.நா.தலைமையகத்தில், திருத்தந்தை வழங்கவிருக்கும் உரையில், அவர் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலின் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தையின் திருமடல், முதலாளித்துவ முறையை வன்மையாக எதிர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்ற கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதைக் குறிப்பிட்டு, பேட்டியில் கேள்விகள் எழுந்தபோது, யாரையும் தாக்கும் நோக்கத்தில் திருத்தந்தை இத்திருமடலை எழுதவில்லை என்றும், நமது பொதுவான இல்லத்தைக் காக்கும் முறைகளை, உலகினர் அனைவரும் இணைந்து சிந்திக்கவேண்டும் என்பதே திருத்தந்தை விடுக்கும் அழைப்பு என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.