2015-09-18 16:53:00

காமரூனில் கத்தோலிக்க வழிபாடுகளுக்கு பொதுமக்களே பாதுகாப்பு


செப்.,18,2015. காமரூன் நாட்டில் போக்கோ ஹாரம் இஸ்லாம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், திறந்தவெளியில் நடைபெறும் கத்தோலிக்க மத வழிபாடுகளுக்கு பொதுமக்களே மனிதச் சங்கிலி அமைத்து பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்தார் அந்நாட்டு ஆயர் புருனோ அட்டெபா (Bruno Ateba).

பலவேளைகளில் புனித வெள்ளி போன்ற ஒரு சோக உணர்வு தங்களைத் தாக்கிச் சென்றாலும், கிறிஸ்தவர்கள், ஒரு நாளும் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்றார் கமரூனின் Maroua-Mokolo ஆயர் அட்டெபா.

நாட்டின் வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கிவரும் சுற்றுலாத்துறையும் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது என்று கூறிய ஆயர் அட்டெபா அவர்கள், போக்கோ ஹாரம் குழுவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அனைத்து சக்திகளையும் கொண்டுள்ள அனைத்துலக சமுதாயம், வாய்மூடி மௌனமாக இருப்பது குறித்த கவலையையும் வெளியிட்டார்.

2 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள காமரூனில், 70 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களாகவும், 20 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகவும் உள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்றியமையாதவை என மேலும் கூறினார் ஆயர் அட்டெபா.

கத்தோலிக்க நல ஆதரவு மையங்களை இஸ்லாமியர்களும் பயன்படுத்துவதுடன், தங்கள் குழந்தைகளையும் கத்தோலிக்க கல்வி நிலையங்களுக்கே அனுப்புகிறார்கள் எனவும் கூறினார் Maroua-Mokolo ஆயர். 

ஆதாரம் : ZENIT/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.