2015-09-17 15:02:00

கடுகு சிறுத்தாலும்–குருவிக்குக்கூட தொந்தரவு இருக்கக் கூடாது


வங்க தேசப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. ஒருநாள் கர்மவீரர் காமராஜர் அவர்களைப் பார்ப்பதற்காக அவரின் வீட்டுக்கு ஒருவர் சென்றிருந்தார். அப்போது காமராஜர், வீட்டு மாடியில் எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தார். என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டார் வந்தவர். இல்லை, ஒரு சமயம் வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர், என்னைப் பார்க்க வந்தபோது ஒரு வானொலிப் பெட்டியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை இங்கேயே வைத்திருந்தேன். இங்கு வருபவர்கள் எல்லாரும் அதை எடுத்துப் பார்ப்பார்கள். அதில் எல்லா நாடுகளின் ஒலிபரப்புகளையும் கேட்கலாம். ஒருநாள் அப்பெட்டி பழுதாகி விட்டது. எனவே எங்கேயோ தூக்கிப் போட்டு விட்டேன். இப்போது வங்க தேசப் போர் நடப்பதால் அதைப் பழுதுபார்த்து வைக்கலாம் என்று தேடுகிறேன் என்றார் கர்மவீரர் காமராஜர். தொடர்ந்து தேடியவர் அதைக் கண்டுபிடித்தார். ஆனால் அந்த வானொலிப் பெட்டியின் பின்புறம் திறந்து கிடந்தது.   அதில் ஒரு குருவிக் கூடு. கூட்டுக்குள்ளே சின்னச் சின்னக் குஞ்சுகள். காமராஜர் அவர்கள் வியப்போடு அக்குஞ்சுகளைப் பார்த்துக்கொண்டிருக்க, அவரைப் பார்க்கச் சென்றவர் அப்பெட்டியை எடுக்க கையை நீட்டினார். ஆனால் காமராஜர் அவர்கள் அவரைத் தடுத்து, இப்பெட்டியை வெளியே கொண்டுபோய் வையுங்கள். குருவி அதுவாகவே கூட்டைக் காலி பண்ணிவிட்டுச் சென்றுவிடும். பின்னர் நாம் வானொலிப் பெட்டியை பழுது பார்க்கலாம் என்று சொன்னார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.