2015-09-17 15:47:00

அர்ப்பணிக்கப்பட்ட இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.17,2015. இங்கு வந்திருக்கும் இளையோரில் பலர் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளீர்கள். இந்நாடுகளில் இன்று கிறிஸ்துவின் சாட்சிகளாக இரத்தம் சிந்தும் பலரின் நினைவுடன் நான் இந்தச் சந்திப்பை ஆரம்பிக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, இளம் துறவியரிடையே கூறினார்.

செப்டம்பர் 15, இச்செவ்வாய் முதல், 19, இச்சனிக்கிழமை முடிய, வத்திக்கானில் நடைபெறும் அர்ப்பணிக்கப்பட்ட இளையோர் மாநாட்டில் கலந்துகொள்ள, உலகின் பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் 5000த்திற்கும் அதிகமான இளம் துறவியரை, இவ்வியாழன் காலை, திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு தன் உரையைத் துவக்கினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரைச் சந்திக்கும் பல தருணங்களில் செய்ததுபோல, இவ்வியாழனன்றும், தான் தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், மூன்று இளம் துறவியர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில், அவரது உரையாக விளங்கியது.

சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து வந்திருந்த பியேர் என்ற இளம் அருள் பணியாளர், இந்தியாவிலிருந்து வந்திருந்த மேரி ஜெசிந்தா என்ற அருள் சகோதரி, மற்றும் சாரா என்ற அருள் சகோதரி மூவரும் கேள்விகள் கேட்டனர்.

திருத்தந்தை, அர்ப்பண வாழ்வை மேற்கொண்டது எப்படி, இன்றையத் திருஅவையில் அர்ப்பணிக்கப்பட்ட இளையோரின் பங்கு, இளம் துறவியருக்கு திருத்தந்தை தர விழையும் அறிவுரை என்ற மூன்று கருத்துக்களில் கேள்விகள் அமைந்திருந்தன.

இளம் துறவியருக்கு தான் தர விழையும் அறிவுரையாக, துறவற வாழ்வில் 'சுகம்' காண்பதை விடுத்து, அவ்வாழ்வின் சவால்களைச் சந்திக்கும் பக்குவத்தை, இளம் துறவியர் பெறவேண்டும் என்பதை திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

துறவற வாழ்விலும், திருஅவையிலும் காணப்படும் தவறுகளான, புறம்கூறுதல், வதந்திகளைப் பரப்புதல் ஆகியவை குறித்து அவ்வப்போது பேசிவரும் திருத்தந்தை, இளம் துறவியருக்கும் இவை குறித்த எச்சரிக்கைகளை விடுத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு துறவற அழைப்பு எவ்விதம் கிடைத்தது என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில், அது கடினமான ஒரு கேள்வி என்றும், ஒருவர் உள்ளத்தில் எவ்வகையான எண்ண ஓட்டங்கள் உருவாகின்றன என்பதை, தெளிவாக வார்த்தைகளில் குறிப்பிட முடியாது என்றும் எடுத்துரைத்தார்.

1953ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 21ம் தேதி, (திருத்தூதர் புனித மத்தேயு திருநாள்), கோவிலுக்குச் சென்ற தனக்குக் கிடைத்த ஓர் உள்ளுணர்வை, பின்னர் சலேசிய அருள் பணியாளர் ஒருவர் வளர்த்ததையும், அவரது வழிகாட்டுதலின்படி, இயேசு சபையில் சேர்ந்ததையும் குறிப்பிட்டத் திருத்தந்தை, சலேசிய சபையைச் சார்ந்த ஒருவரால் இயேசு சபைக்கு தான் வழிநடத்தப்பட்டது, 'துறவு சபைகளிடையே ஒன்றிப்பு' என்பதைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.