2015-09-16 16:51:00

வத்திக்கானில், அர்ப்பணிக்கப்பட்ட இளையோரின் உலக மாநாடு


செப்.16,2015. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு என்பதன் பொருளை உலகறியச் செய்யும் இளையோரை, புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் திருத்தலங்கள் அடங்கிய உரோம் நகரில் வரவேற்கிறேன் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

செப்டம்பர் 15, இச்செவ்வாய் முதல், 19, இச்சனிக்கிழமை முடிய, உலகின் பல நாடுகளிலிருந்து வத்திக்கானில் கூடிவந்துள்ள அர்ப்பணிக்கப்பட்ட இளையோர் மாநாட்டின் பிரதிநிதிகளை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் João Braz de Aviz அவர்கள், இவ்வாறு வரவேற்றார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டின் ஒரு நிகழ்வாக, நடைபெறும் இந்த உலக மாநாடு, இச்செவ்வாய் மாலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில், மாலை வழிபாட்டுடன் துவங்கியது.

இந்த மாலை வழிபாட்டின் துவக்கத்தில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டு நினைவாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் துறவியர் 50 பேர், எரியும் திரிகளையும், அன்னை மரியாவின் திரு உருவத்தையும் பசிலிக்கா வளாகத்திற்குள் பவனியாக கொணர்ந்தனர்.

'உலகை விழித்தெழச் செய்யுங்கள்' என்ற மையக் கருத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அர்ப்பணிக்கப்பட்ட இளையோர் மாநாட்டின் துவக்க நிகழ்வில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு திருப்பேராயத்தின் செயலர், பேராயர் José Rodríguez Carballo அவர்கள், துணிவுடன் இருங்கள், பிரமாணிக்கமாக இருங்கள், பலன் தாருங்கள் என்ற மூன்று கருத்துக்களில் இளையோருக்கு மறையுரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.