2015-09-16 16:32:00

மறைக்கல்வி உரை–இறைத்திட்டத்தில், குடும்பத்தின் முக்கிய பங்கு


செப்.16,2015.  வரும் வாரம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்ஃபியா நகரில்  இடம்பெற உள்ள குடும்பங்களின் உலக சந்திப்பு மாநாடு மற்றும் உரோம் நகரில் குடும்பங்களை மையப்படுத்தி இடம்பெற உள்ள உலக ஆயர்கள் மாமன்றம் போன்றவைகளுக்குத் தயாரிப்பாக, திருமணம் மற்றும் குடும்பம் குறித்த தன் கருத்துக்களை,  26 தொடர்களாக இதுவரை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 27வது வாரமான இப்புதனன்று, அத்தொடரின் நிறைவுரையை வழங்கினார்.

அடுத்த வாரம் ஃபிலடெல்ஃபியாவில் இடம்பெற உள்ள குடும்பங்களின் உலக சந்திப்பு மாநாடு, மற்றும் உரோம் நகரில் இடம்பெற உள்ள உலக ஆயர்கள் மாமன்றம் ஆகியவைகளுக்கு முன்னராக, திருமணம் மற்றும் குடும்பம் குறித்த  இத்தொடரை இன்று நிறைவு செய்வோம். கடந்த சில மாதங்களில், கடவுளின் வார்த்தையால் வழிநடத்தப்பட்டு, மனிதகுல குடும்பமனைத்தின் நல்ல வருங்காலத்திற்கும் உதவவல்ல, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் உடன்படிக்கையின் நீடித்து நிலைத்து நிற்கும் மதிப்பீடு குறித்து ஆழமாக சிந்தித்தோம். மேலும், மனிதாபிமான அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வை வடிவமைப்பதில், இறைவனின் திட்டத்தில், திருமணத்திற்கும் குடும்பத்திற்கும் மிக முக்கியப் பங்கு உள்ளது. திருமணம் மற்றும் குடும்பத்தின் இந்த முக்கிய பங்கு, ஓர் இக்கட்டான சூழலைச் சந்தித்து வருகிறது. ஏனெனில், இன்றைய சமூகம் மிகவும் அதிகமான முறையில் தொழில்நுட்பத்திற்கும், பல்வேறு வகையான பொருளாதார காலனி ஆதிக்கங்களுக்கும் அடிமையாகி, இலாபத்தின் முன்னால் அறநெறிக் கூறுகளை அடிமைப்படுத்தியுள்ளது. உலகின் துவக்கத்திலிருந்தே, இறைவன், தன் படைப்பை ஆணிடமும் பெண்ணிடமுமே ஒப்படைத்தார். இறைவனின் துவக்க நிலை ஆசீரை நாம் ஏற்க மறுத்துள்ள போதிலும், இந்த உலகை, அனைவரும் வாழும் பொது இடமாக மாற்றும் நம் முயற்சிகளை, அவர் அக்கறையுடன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எல்லாத் தலைமுறைகளிலும் நம்மை ஆசீர்வதித்துப் பாதுகாப்பது குறித்த அவரின் வாக்குறுதியை, தன் மகன் இயேசுவின்  வருகையின் வழியாக சிறப்பான விதத்தில் நிறைவேற்றியுள்ளார் இறைவன். இந்த இறையாசீர் குறித்து, உலகின் அனைத்துப் பகுதிகளின் குடும்பங்களும் அறிந்து கொள்வதாக.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இவ்வார இறுதியில் துவக்கவிருக்கும் கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆகியவற்றில் மேற்கொள்ளும் திருத்தூது திருப்பயணம் குறித்து எடுத்துரைத்தார்.  மிகப்பெரும் நம்பிக்கையுடன், நான் இந்த திருப்பயணத்தைத் துவக்க உள்ளேன். இந்த திருப்பயணத்தின் முக்கிய நோக்கம், ஃபிலடெல்ஃபியாவில் இடம்பெற உள்ள 8வது குடும்ப மாநாடாகும். ஐ.நா. நிறுவனம் உருவாக்கப்பட்டதன் 70ம் ஆண்டையொட்டி அங்கும் செல்ல உள்ளேன். தங்கள் மேய்ப்பர்களின் உதவியுடன்  ஆன்மீக முறையில் தங்களை சிறப்பாகத் தயாரித்துவரும் கியூபா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இவ்விரு நாடுகளுக்கும் பாதுகாவலியாக இருக்கும் அன்னைமரியின் பரிந்துரைக்காகவும், தூய ஆவியின் பலம் மற்றும் ஒளியைத் தூண்டும் முறையிலும் உங்கள் செபத்துடன் என்னுடன் பயணிக்குமாறு அனைவரையும் விண்ணப்பிக்கிறேன்.

இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தூய ஆவியாரின் தொமினிக்கன் சகோதரிகள் என்ற துறவு சபையைத் தோற்றுவித்த, வணக்கத்துக்குரிய இறையடியார் ஆயர் Pius Alberto Corona அவர்களுக்கு, அருளாளர் பட்டம், வரும் சனிக்கிழமையன்று, இத்தாலியின் San Miniato நகரில் இடம்பெற உள்ளதையும் சுட்டிக்காட்டினார். தன் மறைக்கல்வி உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.