2015-09-16 17:26:00

பெண்களின் கல்விக்கென உழைப்பவருக்கு ஐ.நா. விருது


பெண்களின் கல்விக்கென உழைப்பவருக்கு ஐ.நா. விருது

 

செப்.16,2015. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ள பெண்களின் கல்வித்தரத்தை உயர்த்தப் பாடுபட்டு வரும் அகீலா ஆசிஃபி (Aqeela Asifi) என்ற ஆசிரியை, ஐ.நா.வின், இவ்வாண்டுக்கான Nansen விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து, பாகிஸ்தானில் வாழ்ந்துவரும் 49 வயது நிறைந்த ஆசிஃபி அவர்கள்,  தன் சொந்த நாட்டிலிருந்து பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ள 1000த்திற்கும் அதிகமான இளம் பெண்களுக்கு கல்வி புகட்டி வருகிறார்.

1992ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஆசிஃபி அவர்கள், கடந்த 23 ஆண்டுகளாக பெண்களின் கல்வியில் தனி கவனம் செலுத்தி வந்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிவித்தது.

தகுந்த கல்வி பெற்ற அன்னையரே அடுத்தத் தலைமுறையை நல்ல முறையில் வளர்க்க முடியும் என்று, ஆசிரியை ஆசிஃபி அவர்கள் கூறியுள்ளார்.

கல்வியில் நம் சக்திகளை மூலதனம் செய்தால், உறுதியான, அமைதியான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று, ஆசிஃபி அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

புலம்பெயர்ந்தோர் மத்தியில் தளராது உழைப்பவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள Nansen விருது, இவ்வாண்டு அக்டோபர் 5ம் தேதி, ஜெனீவாவில் நடைபெறும் ஒரு விழாவில், அகீலா ஆசிஃபி அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.