2015-09-16 16:43:00

திருத்தந்தையின் 10வது திருத்தூதுப் பயண விவரங்கள்


செப்.16,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதுவரை மேற்கொண்டுள்ள 9 பன்னாட்டு திருத்தூதுப் பயணங்கள் அனைத்தையும் விட, செப்டம்பர் 19ம் தேதி அவர் மேற்கொள்ளவிருக்கும் 10வது திருத்தூதுப் பயணம் நீண்டதாக இருக்கும் என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர், ஃபெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

திருப்பீடத்தின் செய்தித் தொடர்பகம், இச்செவ்வாய் பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், அருள்பணி லொம்பார்தி அவர்கள், இம்மாதம் 19ம் தேதி முதல், 28ம் தேதி முடிய கியூபா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரு நாடுகளுக்கு, திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை வழங்கினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வரும் ஒரு சிறப்புக் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கவிருக்கும் உரை, திருஅவை வரலாற்றில் முதல் முறையாக இடம்பெறும் நிகழ்வு என்ற குறிப்பை அருள்பணி லொம்பார்தி செய்தியாளர்களிடம் கூறினார்.

செப்டம்பர் 19ம் தேதி உரோம் நகரிலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் மூன்று நாட்கள் கியூபா நாட்டிலும், அடுத்த ஆறு நாட்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின், வாஷிங்க்டன், நியூயார்க் மற்றும் ஃபிலடெல்ஃபியா ஆகிய நகரங்களிலும் பயணங்கள் மேற்கொள்வார் என்று அருள்பணி லொம்பார்தி குறிப்பிட்டார்.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய மூன்று திருத்தந்தையரை, கடந்த 15 ஆண்டுகளில், வரவேற்கும் பெருமை கியூபா நாட்டைச் சேரும் என்று குறிப்பிட்ட அருள்பணி லொம்பார்தி அவர்கள், பயணத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை எனினும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கியூபா நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர், ஃபிடேல் காஸ்ட்ரோ அவர்களைச் சந்திக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

வாஷிங்க்டன் நகரில் அருளாளர் ஜூனிபெரொ செர்ரா அவர்களுக்கு, புனிதர் பட்டம் வழங்குவதும், ஃபிலடெல்ஃபியா நகரில் அனைத்துலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதும் திருத்தந்தையின் ஆன்மீக அளவிலான முக்கிய நிகழ்ச்சிகள் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் எடுத்துரைத்தார்.

தலைநகர் வாஷிங்க்டனில், அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை உறுப்பினர்களை ஒரு சேர சந்தித்து திருத்தந்தை வழங்கும் உரையும்,

நியூயார்க் நகரில், ஐ.நா.வின் பொது அவையில் திருத்தந்தை வழங்கும் உரையும் சிறப்பு பெற்ற சமூக நிகழ்வுகளாக அமையும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.