2015-09-16 17:26:00

சமுதாய வலைத்தளங்கள் வழியே வன்முறைகள் பரவும் வேதனை


செப்.16,2015. மத்தியக் கிழக்குப் பகுதிகளை அழித்துவரும் வன்முறைகள், சமுதாய வலைத்தளங்கள் வழியே பரவிவருவது, மிகவும் வேதனையைத் தருகிறது என்று, Kaiciid ("King Abdullah" International Centre for interreligious and intercultural dialogue) என்ற பன்னாட்டு மையம், வருத்தத்தை வெளியிட்டுள்ளது.

பல்சமய, மற்றும் பன்முக கலாச்சாரங்களை வளர்க்க 'அரசர் அப்துல்லா' பெயரால் உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு மையமான Kaiciid, இச்செவ்வாயன்று நிறைவு செய்த ஐந்து நாள் கருத்தரங்கில், சமுதாய வலைத்தளங்கள் வழியே பரவி வரும் வெறுப்புணர்வுகள் குறித்து கருத்துக்கள் வழங்கப்பட்டன. 

'மதத்தின் பெயரால் விளையும் வன்முறைகளுக்கு எதிராக இணைவோம்' என்ற கருத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், மனித குலத்தை வளர்ப்பதற்கு உருவாக்கப்பட்ட சமுதாய வலைத்தளங்கள், மக்களின் அழிவுக்கென பயன்படுத்தப்படுவது மிக துயரம் தரும் போக்கு என்ற எண்ணம் வலியுறுத்தப்பட்டது.

சவுதி அரேபியா, ஸ்பெயின், ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் இணைந்து, 2012ம் ஆண்டு, வியென்னா நகரில் உருவாக்கிய Kaiciid அமைப்பில், கிறிஸ்தவ, புத்த, இந்து, யூத மதங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், இவ்வமைப்பின் பார்வையாளர் அங்கத்தினாராக திருப்பீடம் உள்ளது என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.