2015-09-16 17:04:00

உலகில் 3, 58,00,000 மக்கள் இன்னும் அடிமைகள் - பேராயர் தொமாசி


செப்.16,2015. மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான, அடிமைத் தனத்திலிருந்து விடுதலை என்ற உரிமையை, இன்றைய உலகில், 3 கோடியே, 58 இலட்சம் மக்கள் இழந்துள்ளனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் இயங்கும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், செப்டம்பர் 15, இச்செவ்வாயன்று, அங்கு நடைபெற்ற மனித உரிமைகள் அவையின் 30வது அமர்வில் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

மிகக் குறைந்த கூலிக்கு தொழில்கள் செய்வதற்கு, வறுமைப்பட்ட நாடுகளிலிருந்து மக்கள் முன்வரும் சூழலில், அதை தங்கள் பேராசைக்காகப் பயன்படுத்தும் குழுக்களால், இம்மக்கள் அடிமைத்தனத்தில் சிக்கித் தவிக்கின்றனர் என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

பொருள் உற்பத்தி என்ற அளவில் மட்டும், மக்கள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறிய பேராயர் தொமாசி அவர்கள், பாலியல் அடிமைகளாக, குறைந்த வயது திருமணங்களுக்கும், வேறு பல கொடுமைகளுக்கும் குழந்தைகளும், சிறுவர், சிறுமியரும் பயன்படுத்தப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

வறுமையில் துன்புறும் மக்களுக்கு, பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, அவர்கள் நவீன அடிமைகளாக மாறுவதை, திருப்பீட உயர் அதிகாரி பேராயர் தொமாசி அவர்கள் மனித உரிமைகள் அவையின் 30வது அமர்வில் வழங்கிய உரையில் எடுத்துரைத்தார்.

மனிதர்களில் சிலர் தேவையற்றவர்கள் என்ற மனநிலையும், 'உலக மயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை'யும் இன்றைய உலகின் அடிமைத்தனம் தழைத்து வளர்வதற்கு முக்கியக் காரணங்கள் என்று பேராயர் தொமாசி தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.