2015-09-16 15:27:00

அமைதி ஆர்வலர்கள் : 1995ல் நொபெல் அமைதி விருது


செப்.16,2015. 1995ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை, இயற்பியல் அறிவியலாளர் ஜோசப் ராட்பிளாட் அவர்களும், அறிவியல் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த Pugwash கழகமும்(Pugwash Conferences on Science and World Affairs)பெற்றனர். பன்னாட்டு அரசியலில் அணுஆயுதங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கவும், காலப்போக்கில், அத்தகைய ஆயுதங்களை ஒழிப்பதற்கும் ஜோசப் ராட்பிளாட்டும், இக்கழகமும் எடுத்த முயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மன்ஹாட்டன் அணுகுண்டு தயாரிப்புத் திட்டத்திலிருந்து மனசாட்சியின் அடிப்படையில் விலகியவர் ஜோசப் ராட்பிளாட். அணுகுண்டு தயாரிப்பில் ஆதரவு குறைவதற்கு இவர் எடுத்துக்கொண்ட முயற்சி, 1963ம் ஆண்டின் பகுதியளவு அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தம் அமல்படுத்தப்படுத்துவதற்குப் பெரும் உதவியாக இருந்தது.

ஜோசப் ராட்பிளாட் அவர்கள், போலந்து நாட்டின் வார்சா நகரில் 1908ம் ஆண்டில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சிக்மண்ட் ராட்பிளாட், தேசிய அளவில் குதிரை வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தார். ஆனால் முதல் உலகப் போர் தொடங்கியதும் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன. அவரது தந்தையின் வர்த்தகமும் சரிந்தது. குடும்பமும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் ஜோசப் படிப்பில் ஆர்வம் கொண்டு, இயற்பியல் வல்லுனராக வேண்டும் என்றும் தீர்மானித்தார். அதனால் பகலில் வீடுகளில் மின்சார வேலை செய்து கொண்டு இரவில் படித்தார். எந்தவிதப் பள்ளிப் படிப்பும் இன்றி போலந்தின் Free பல்கலைகழகத்தில் சேர்ந்து 1932ம் ஆண்டில் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், 1938ம் ஆண்டில் வார்சா பல்கலைகழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். Free பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியல் துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். Tola Gryn என்ற பெண்னையும் திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னரே அணுப் பிளவுகள் பற்றிப் பரிசோதனை நடத்தினார் ஜோசப் ராட்பிளாட். இது நியூட்ரான்களை வெளியேற்றியதையும் கண்டார். நியூட்ரானைக் கண்டுபிடித்த இயற்பியலாளர் James Chadwick அவர்களுக்குக்கீழ் லிவர்ஃபூல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்துவதற்கு 1939ம் ஆண்டில் அழைக்கப்பட்டார். அணுக்கூறுகளை வேகமாக நகர வைக்கும் cyclotron இயந்திரத்தை Chadwick அமைத்துக் கொண்டிருந்தார். இதேபோல் வார்சாவிலும் அமைக்கும் நோக்கத்தில், ஜோசப், லிவர்ஃபூல் சென்று, Chadwick கொடுத்த கல்வி உதவி நிதியைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டார். குடும்ப வறுமையால் மனைவியை விட்டுச் சென்ற அவர், பின்னாளில் அவரை இங்கிலாந்துக்கு அழைக்க பலமுறை முயற்சித்தார். ஆனால் 1939ம் ஆண்டு செப்டம்பரில் ஜெர்மன் படைகள் போலந்தை ஆக்ரமித்தன. நிலைமை மோசமடைந்தது. இவரது மனைவி இரண்டாம் உலகப் போரில் நாத்சி வதைப்போர் முகாமில் கொல்லப்பட்டார்.

1939ம் ஆண்டில் இரு ஜெர்மன் அறிவியலாளர்கள் யுரேனிய அணுவைப் பிரித்திருந்தனர். இது உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த அறிவியலாளர்கள் அணுப் பிளப்பு பற்றிக் கண்டுபிடிக்கத் தூண்டியது. ஜோசப் ராட்பிளாட்டும் தன்னால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்பதை உணர்ந்தார். ஆனால் இதன் எதிர்விளைவு பற்றி உணர்ந்து அதனை  தனது மனதிலிருந்து அகற்றினார். பின்னர் நாத்சி ஜெர்மனியை அடக்குவதற்கு ஒரே வழி அணுகுண்டு தயாரிப்பதே என்று உணர்ந்து ஜோசப் ராட்பிளாட், James Chadwickடன் சேர்ந்து அணுகுண்டு தயாரிக்கும் வேலையைத் தொடங்கினார். 1944ம் ஆண்டின் ஆரம்பத்தில் இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மன்ஹாட்டன் திட்டத்தில் முதல் அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்காக, James Chadwickடன் சேர்ந்து அங்குச் சென்றார். இத்தகைய அழிவுக்குரிய ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு அறிவியல் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் தொடர்ந்து உறுதியாய் இருந்த இவர், 1944ம் ஆண்டு மார்ச் மாதத்தில், அணுகுண்டு தயாரிப்பின் உண்மையான நோக்கம் சோவியத்தை அடிபணியச் செய்வதே என்று அமெரிக்க அதிபர் லெஸ்லி குரூவ்ஸ் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அதேநேரம், 1944ம் ஆண்டின் இறுதியில் ஜெர்மன் அறிவியலாளர்கள் அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தைக் கைவிட்டனர். ஜோசப் ராட்பிளாட்டும் அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்திலிருந்து ஒதுங்கத் தீர்மானித்தார்.

இதற்கிடையில் இவரை சோவியத்தின் உளவாளி என்றெல்லாம் குற்றம் சுமத்தினர். அணுகுண்டு தயாரிப்பது பற்றி ஒருமுறைக்கு இரண்டுமுறை சிந்திக்குமாறு இவர் தனது சக அறிவியலாளர்களை வற்புறுத்தி வந்தார். முதலில் ஜோசப் ராட்பிளாட்டின் கருத்துக்கு இணங்கிய அறிவியலாளர்கள், 2ம் உலகப் போரில் ஜப்பான் நுழைந்த பின்னர் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். ஜோசப் ராட்பிளாட் அவர்கள், மன்ஹாட்டன் திட்டத்தைக் கைவிட்டு 1945ம் ஆண்டு ஆரம்பத்தில் பிரிட்டன் திரும்பினார். இதுவே ஜோசப் ராட்பிளாட்டுக்கு என்றென்றும் பெருமையைத் தேடிக் கொடுத்தது. அணு ஆயுதங்கள் மற்றும் போர்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினார். பிரிட்டன் முழுவதும் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். அணு ஆயுத ஒழிப்புக்காக உழைத்த இவர் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி காலமானார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.