2015-09-15 16:36:00

விவிலியத் தேடல் : இறுதித்தீர்ப்பு உவமை – பகுதி - 5


'துவக்கம் முதல், இறுதி வரை ஒரே கோடு கொண்டு வரையப்பட்ட இயேசுவின் முகம்' என்ற ஓவியத்தை, அண்மையில், மீண்டும் பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. 1884ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஓவியத்தின் தனிச் சிறப்பு - இந்த ஓவியம் முழுவதும் ஒரே ஒரு கோட்டினால் வடிவமைக்கப்பட்டது. நீள்வட்ட வடிவம் கொண்ட இந்த ஓவியத்தின் நடுவில் ஆரம்பமாகும் கோடு, வட்ட, வட்டமாகச் சுற்றிச் சுற்றி வரையப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தடித்தும், ஒரு சில இடங்களில் மிக மெல்லியதாகவும் வரையப்பட்டுள்ள இந்தக் கோட்டின் மொத்தப் பாதையை ஒரு சேரப் பார்க்கும்போது, அங்கு இயேசுவின் முகம் தெரிகிறது. முள்முடி தாங்கி, விண்ணை நோக்கியப் பார்வையுடன், துயரத்தில் தோய்ந்திருக்கும் இயேசுவின் முகம், பார்க்கும் யாரையும் ஏதோ ஒருவகையில் பாதிக்கும். அந்த ஓவியரின் கலைநயத்தைப் பாராட்டுவதா, அல்லது, அவரது அளவற்ற பொறுமையைப் பாராட்டுவதா என்றறியாமல் திகைத்து நின்றேன். அந்த ஓவியம், இரு எண்ணங்களை எனக்குள் ஆழப் பதித்தன. அவ்விரு எண்ணங்களும், நாம் தற்போது சிந்தித்துவரும் 'இறுதித்தீர்ப்பு உவமை'யுடன் தொடர்புடையவை.

முதல் எண்ணம்: இயேசுவின் முகம், பல்லாயிரம் ஓவியங்களாய் வரையப்பட்டுள்ளது. அவற்றில் இயேசுவுக்கு அதிக விருப்பமான ஓவியம் எது என்று அவரிடமே கேட்டால், அவர் ஒருவேளை இந்த ஓவியத்தைத் தேர்ந்தெடுப்பார் என்று நான் நினைக்கிறேன். ஆயராக, போதகராக, புதுமை செய்பவராக, தலைவராக... பல்வேறு கோணங்களில் சித்திரிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் ஓவியங்களில், துன்புறும் ஒரு மனிதராக, தன்னை அடையாப்படுத்திக்கொள்வதே, இயேசுவின் விருப்பமாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

முள்முடி தாங்கி நிற்கும் இயேசுவின் முகத்தை இந்த ஓவியத்தில் பார்க்கும்போது, இயேசுவின் பாடுகள் நேரத்தில் நிகழ்ந்த "இதோ! மனிதன்" காட்சி, நம் மனங்களில் நிழலாடுகிறது. ஆளுநர் பிலாத்துவின் மாளிகையில் நிகழ்ந்த அந்தக் காட்சியை, யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்:

யோவான் நற்செய்தி 19 1-5

பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து, "யூதரின் அரசே வாழ்க!" என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.

பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், "அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்" என்றான். இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், "இதோ! மனிதன்" என்றான்.

பிலாத்து மாளிகையில் கிடைத்த சாட்டையடிகளும், முள்முடியும், வீரர்கள் இயேசுவின் மீது குவித்த அவமானங்களும், 'மனிதன்' என்ற சாயலையே இயேசுவிடமிருந்து பறித்துவிட்டன. எனவேதான், அவர் வெளியே வந்தபோது, அவரை 'இதோ! மனிதன்' என்று, பிலாத்து, மக்கள் முன் அறிமுகம் செய்துவைக்க வேண்டியதாயிற்று.

பல்வேறு துன்பங்களால் தங்கள் முகத்தையும், முகவரியையும் இழந்து, அடையாளம் ஏதுமின்றி அலையும் பல கோடி மக்களுடன், இயேசு, அவ்வேளையில் தன்னையே இணைத்துக்கொண்டார். இதே இணைப்பை, அவர், இறுதித்தீர்ப்பு நேரத்திலும் உருவாக்குகிறார். மனிதர்கள் என்ற அடையாளமே இன்றி உருக்குலைந்து போயிருக்கும் இம்மனிதர்களே, இறுதித் தீர்ப்பு வேளையில், இயேசுவோடு இணைந்து, நமக்குத் தீர்ப்பு வழங்க வருவர் என்பதை இந்த உவமை நமக்கு நினைவுறுத்துகிறது.

‘ஒரே கோடு கொண்டு வரையப்பட்ட இயேசுவின் முகம்’ என்ற இவ்வோவியம் எனக்குள் உருவாக்கிய இரண்டாவது எண்ணம்... நம் அனைவரின் வாழ்வும் ஓர் ஓவியம் என்ற எண்ணம். இது, ஒரு கோட்டினாலோ, அல்லது, குறுக்கும், நெடுக்குமாகச் செல்லும் பல கோடுகளாலோ வரையப்பட்டுள்ளது.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் (இன்னும் சொல்லப்போனால், எல்லா உயிரினங்களுக்கும்) பிறப்பு, இறப்பு என்ற இரு புள்ளிகள் உண்டு. இவ்விரு புள்ளிகளையும் இணைத்து நாம் வரையும் கோலம், அல்லது, ஓவியம், நமது வாழ்வு. பல நேரங்களில் நாம் வரையும் கோலம் அலங்கோலமாய் மாறினாலும், அதை அழித்துத் திருத்தி, மீண்டும், மீண்டும், அழகானக் கோலமாக, அல்லது, ஓவியமாக வரைய நமக்கு அழைப்பு வந்தவண்ணம் உள்ளது.

அயலவருக்கு, குறிப்பாக, தேவையில் இருக்கும் அயலவருக்கு உதவிகள் செய்யும்போது, நமது ஓவியத்தில் அழகான வண்ணங்கள் பல இணைக்கப்படுகின்றன என்பது நிச்சயம். பல வண்ணங்களில் ஒளிரும் நம் வாழ்வு ஓவியத்தை, இறுதித் தீர்ப்பு நேரத்தில் காணும் இறைவன், நம்மை ஆசீர்வதித்து வரவேற்பார். அவர் தரும் ஆசி மொழிகளையே நாம் 'இறுதித் தீர்ப்பு உவமை'யின் ஆரம்ப வரிகளாக சென்ற வாரம் வாசித்தோம். இந்த ஆசீரைப் பெறுவதற்கு, நேர்மையாளர்கள் செய்த ஆறு செயல்களை, தீர்ப்பிட வரும் அரசர் கூறுகிறார்.

உணவு, நீர், உடை, இருப்பிடம் இன்றி தவித்தோரின் தேவைகளை நிறைவு செய்ததும், உடல்நலம் குன்றி, சுதந்திரத்தை இழந்து வாடும் மக்களைச் சந்தித்ததும், விண்ணக வாயிலைத் திறக்க ஏதுவான நற்செயல்களாகக் கூறப்பட்டுள்ளன.

மற்றொரு அழுத்தமான உண்மையும், அரசரின் கூற்றில் வெளியாகிறது. இத்துன்பங்களால் வாடும் மக்களுடன், இறைவனும் இணைந்து துன்புறுகிறார் என்பதை, அரசரின் வார்த்தைகள் தெளிவாக்குகின்றன.

'பசியால் இருந்தோருக்கு நீங்கள் உணவு கொடுத்தீர்கள்' என்று அரசர் சொல்லவில்லை; மாறாக, ‘நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்று அரசர் சொல்கிறார்.

அரசரின் இந்தக் கூற்றைக் கேட்டதும் அங்கிருந்தோர் ஆச்சரியமடைகின்றனர். ஏழைகள் சார்பாக, ஏழைகளுக்குத் துணையாக  இறைவன் இருப்பார் என்பதை நேர்மையாளர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இறைவன், ஓர் ஏழையாகவே மாறி, அவர்களைச் சந்தித்தார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஆச்சரியத்துடன் அவர்கள் எழுப்பிய கேள்வியும், அதற்கு அரசர் சொன்ன பதிலும், இந்த உவமையில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது:

மத்தேயு நற்செய்தி 25: 37-40

அதற்கு நேர்மையாளர்கள் "ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.

ஏழைகளின் உருவத்தில் நம்மைச் சந்திக்கவரும் இறைவனைப் பற்றி எல்லா மதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இரஷ்ய எழுத்தாளர், லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்கள் எழுதிய, 'காலணிகள் செய்யும் மார்ட்டின்' (Martin the Cobbler) என்ற கதை, நமக்கெல்லாம் தெரிந்த ஒரு கதை. 'நாளை நான் வருவேன்' என்று கனவில் அறிவித்த இறைவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மார்ட்டின், அன்று முழுவதும், தேவையில் இருந்த மூவருக்கு உதவிகள் செய்கிறார். இரவானது. இறைவன் இன்னும் வரவில்லை. எனவே, மார்ட்டின் இறைவனிடம், 'ஏன் வரவில்லை?' என்று வருத்தத்துடன் முறையிடும்போது, மார்ட்டினால் அன்றைய தினம் உதவி பெற்ற மூவரும் அந்த அறையில் தோன்றுகின்றனர். 'நான் இவர்கள் வடிவில் உன் வீட்டிற்கு ஏற்கனவே வந்துவிட்டேன்' என்று இறைவன் சொல்வதுபோல இந்தக் கதையை நிறைவு செய்துள்ளார், எழுத்தாளர் டால்ஸ்டாய்.

ஏழையின் வேடமேற்று இறைவன் வருவார் என்ற கதைகள் பல உள்ளன. இறைவன் ஏழையாகவே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார் என்பதை இறுதி தீர்ப்பு உவமை ஆணித்தரமாகக் கூறுகிறது.

'ஏழைகள் சார்பில் முடிவெடுப்பது' (‘option for the poor’) என்ற சொற்றொடர், கடந்த 50 ஆண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொற்றொடரின் ஆரம்பமாகக் கருதப்படுவது, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவான 'விடுதலை இறையியல்'. விடுதலை இறையியலுக்கும், ஏழைகள் சார்பில் முடிவெடுத்தல் என்ற நிலைப்பாட்டிற்கும் அடித்தளமாக அமைந்தது, 'இறுதித் தீர்ப்பு உவமை' என்று சொல்வது மிகையல்ல. இந்த நிலைப்பாட்டின்படி வாழ்ந்து காட்டிய ஓர் இயேசு சபை அருள்பணியாளர், ருத்திலியோ கிராந்தே (Rutilio Grande) அவர்கள்.

நான்கு மாதங்களுக்கு முன், (23, மே 2015) அருளாளராக உயர்த்தப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், எல் சால்வதோர் நாட்டின் தலைநகர் சான் சால்வதோரில் பேராயராகப் பணியாற்றிவந்த வேளையில், அருள்பணி கிராந்தே அவர்களின் தோழமை பேராயருக்குக் கிடைத்தது. அருள்பணி கிராந்தே அவர்கள் ஏழைகள் மீது காட்டிய ஈடுபாட்டினால் பேராயர் ரொமேரோ அவர்களும் ஈர்க்கப் பெற்றார். அவ்வேளையில், அருள்பணி கிராந்தே அவர்கள், அநியாயமாகக் கொல்லப்பட்டார். அந்த அநீதமான கொலை,  பேராயர் ரொமேரோ அவர்களை, ஏழைகள் சார்பில் போராடத் தூண்டியது. அந்தப் போராட்டத்தின் விளைவாக, பேராயர் ரோமெரோ அவர்கள், 1980ம் ஆண்டு, தன் உயிரைத் தியாகம் செய்தார்.

ஒரு முறை அவரிடம், 'ஏழைகள் சார்பில் முடிவெடுப்பது' என்றால் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அருளாளர் ரொமேரோ அவர்கள், ஓர் உருவகத்தைப் பயன்படுத்தினார்:

"ஒரு கட்டடம் தீப்பற்றி எரிகிறது என்று வைத்துக்கொள்வோம். எரிந்துகொண்டிருக்கும் கட்டடத்தை, நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். கட்டடத்தின் உள்ளே இருப்பவர்கள் பத்திரமாக உள்ளனரா என்ற கேள்வி, உங்களுக்குள் அவ்வப்பதோது எழுகிறது. அப்போது, அருகிலிருந்து யாரோ, உங்கள் அம்மாவும், சகோதரியும் கட்டடத்தின் உள்ளே இருக்கின்றனர் என்று சொல்கிறார்கள். உங்கள் மனநிலை உடனடியாக, முழுமையாக மாறுகிறது. உங்கள் அம்மாவையும், சகோதரியையும் வெளியேக் கொணர்வதற்கு நீங்கள் முயற்சிகள் எடுக்கிறீர்கள். அந்த முயற்சி, உங்கள்மேல் தீக்காயங்களை உருவாக்கினாலும், அதிலிருந்து பின்வாங்க மறுக்கிறீர்கள். 'ஏழைகள் சார்பில் முடிவெடுப்பது' என்பது இதுதான். வறுமை என்ற நெருப்பை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பது ஒன்று, அந்த நெருப்புக்குள் கிறிஸ்து சிக்கியிருக்கிறார் என்று எண்ணி, செயல்களில் இறங்குவது வேறு."

தேவைகள் என்ற நெருப்பில் தினம், தினம் தீக்கிறையாகும் மனிதருக்கு உதவிகள் செய்த நேர்மையாளர்களை, ஆசீர் அளித்து அழைத்துச் செல்லும் இறைவன், இந்த உதவிகளைச் செய்ய மறுத்தவர்களை நோக்கிச் சொல்லும் வார்த்தைகள், இந்த உவமையின் அடுத்த பகுதியில் சொல்லப்பட்டுள்ளன. அயலவர் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல், தன்னலத்திலேயே புதைந்திருக்கும் பலருக்கு, சவாலாக அமைந்துள்ள இப்பகுதியை, அடுத்தத் தேடலில் நாம் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.