2015-09-15 16:29:00

கடுகு சிறுத்தாலும் - வைரங்களைவிட, வறியோரே இறைவனின் சொத்து


மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த (225-258) இலாரன்ஸ் என்ற இளையவரை, திருத்தந்தை 3ம் சிக்ஸ்துஸ் அவர்கள், தியாக்கோனாக திருநிலைப்படுத்தினார். உரோம் நகரில், திருஅவைக்கு உரித்தான சொத்துக்களைப் பாராமரிக்கவும், ஏழைகளுக்கு உதவிகள் செய்யவும், இளையவர் இலாரன்ஸை, திருத்தந்தை நியமித்தார். கொடுங்கோல் மன்னன் வலேரியன், தன்னைச் சிறைப்படுத்த ஆணையிட்டுள்ளார் என்பதை அறிந்த திருத்தந்தை, இளையவர் இலாரன்ஸை அழைத்து, "திருஅவை சொத்துக்களைக் கண்காணித்துக் கொள்" என்று கூறிவிட்டு, சிறைக்குச் சென்றார்.

திருத்தந்தையைச் சிறைப்படுத்திய மன்னன், திருஅவை சொத்துக்கள் அனைத்தும், இலாரன்ஸ் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதை அறிந்து, அவரை அழைத்து, "நான் உனக்கு மூன்று நாள் தருகிறேன். அதற்குள், திருஅவை சொத்துக்கள் அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்துவிடு" என்று ஆணையிட்டார். இளையவர் இலாரன்ஸ் உடனே சென்று, கோவில் சொத்துக்களை விற்று, ஏழைகளுக்கு வழங்கினார். மூன்றாம் நாள் அவர் மன்னனைக் காணச் சென்றபோது, மன்னன் அவரிடம், "திருஅவை சொத்துக்கள் எங்கே?" என்று கேட்க, இளையவர் இலாரன்ஸ், அவரை அரண்மனைக்கு முன்புறம் அழைத்துச் சென்றார். அங்கு, பல்லாயிரம் வறியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை மன்னரிடம் காட்டி, "இவர்களே திருஅவையின் சொத்துக்கள்" என்று கூறினார்.

இறைவன் பார்வையில், வைரங்களைவிட, வறியோரே மதிப்பு பெற்ற சொத்துக்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.