2015-09-15 16:16:00

இந்தியக் குடியரசுத் தலவைருடன் கந்தமால் கிறிஸ்தவர்கள்


செப்.15,2015. ஒடிஸ்ஸா மாநிலத்தின் கந்தமால் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களின்போது தப்பிப் பிழைத்த கிறிஸ்தவர்கள் அடங்கியக் குழு ஒன்று, அண்மையில், இந்தியக் குடியரசுத் தலவைர் பிரணாப் முகர்ஜி அவர்களைச் சந்தித்து, ஒரு சில குறைகளை முன்வைத்தது.

கந்தமால் நீதி, அமைதி அவையின் பிரதிநிதிகள், ஒருசில எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் குடியரசுத் தலைவரைச் சந்தித்த இந்தக் கிறிஸ்தவர்கள், இந்து சாமியார் ஒருவரைக் கொன்றதாக, முழு விசாரணையின்றி, தண்டனை வழங்கப்பட்டுள்ள 7 அப்பாவி கிறிஸ்தவர்களின் வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தனர்.

2008ம் ஆண்டு, கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின்போது, குறைந்த பட்சம் 90 பேர் கொல்லப்பட்டது, 395 வழிபாட்டுத் தலங்கள் சேதமாக்கப்பட்டது, 600 கிராமங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, 6500 வீடுகள் அழிக்கப்பட்டது, 56,000த்திற்கும் அதிகமானோர் தங்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேற்றப்பட்டது, 10,000த்திற்கும் அதிகமான குழந்தைகளின் கல்வி தடைபட்டது போன்ற விவரங்கள் அடங்கியப் பட்டியல் ஒன்றையும் இக்குழு, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்தது.

இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா எனுமிடத்தில் நடைபெற்ற சுரங்க வெடிகுண்டுகள் விபத்தில் உயிரிழந்த 104 பேரின் குடும்பங்களுக்கும், காயமுற்றோருக்கும் தலத்திருஅவை பொருளாதார உதவிகளை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.