2015-09-14 15:59:00

வாக்குறுதியால் கவர்ந்து, அழிவுக்கே இட்டுச் செல்கிறான் தீயோன்


செப்.14,2015. நமக்கு மகிழ்வைத் தரும் வகையில் நம்மைக் கவர்ந்து, இறுதியில், நம்மையே அழிவுக்கு இட்டுச் செல்லும் சோதனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்று, இத்திங்கள் காலை மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

C 9 என்றழைக்கப்படும், ஒன்பது கர்தினால்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவுடன், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருச்சிலுவை உயர்த்தப்பட்டு, மாட்சிமைபடுத்தப்பட்ட இந்நாளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

பாம்பின் சூதுச் செயலால் பாவம் இவ்வுலகில் நுழைந்தது என்ற, பழைய ஏற்பாட்டு நிகழ்வையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, தீயோன், பல வாக்குறுதிகளை நம்முன் வைத்து நம்மைக் கவர்கிறான், ஆனால், இறுதியில் நம்மை அழிக்கவே அவற்றைப் பயன்படுத்துகிறான் என்று மேலும் கூறினார்.

நம்முடையப் பாவங்களைச் சுமந்து, நமக்காகச் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைப் போல், நாமும், தாழ்ச்சியின் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஏனெனில், கிறிஸ்தவ வாழ்வை நோக்கியப் பாதை என்பது, தாழ்ச்சியின் பாதையே என்று தன் மறையுரையில் எடுத்தியம்பினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.