2015-09-14 16:46:00

புதிய அருளாளர் தாஸ்வா குறித்து திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.14,2015. இஞ்ஞாயிறு மாலை, தென் ஆப்ரிக்காவில் அருளாளராக அறிவிக்கப்பட்ட சாமுவேல் பெனடிக்ட் தாஸ்வா (Benedict Samuel Tshimangadzo Daswa) குறித்தும், தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்திக்கு விசுவாசமாக இருந்த காரணத்தால், 1990ம் ஆண்டு கொல்லப்பட்ட பொதுநிலையினரான, இளையவர் பெனடிக்ட் தாஸ்வா, தன் வாழ்நாள் முழுவதும் உலகப் போக்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து, கிறிஸ்தவ வாழ்வில் நிலையாக இருந்தார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவக் குடும்பங்கள், உண்மையையும், பிறரன்பையும் உலகில் பரப்புவதற்கு, இப்புதிய அருளாளரின் சாட்சிய வாழ்வு அனைவருக்கும் உதவட்டும் என்று எடுத்துரைத்தார்.

1946ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி, தென் ஆப்ரிக்காவில் பிறந்து, பள்ளியொன்றில் ஆசிரியராகவும், பின்னர் பள்ளி முதல்வராகவும் பணியாற்றிய பெனடிக்ட் தாஸ்வா அவர்கள்,  கிறிஸ்தவ மறையைத் தழுவியபின், பூர்வீக இனத்தவரின் பில்லி சூனிய நடவடிக்கைகளை எதிர்த்ததால், கல்லால் எறியப்பட்டும், காதிலும், மூக்கிலும், கொதிக்கும் நீர் ஊற்றப்பட்டும் கொலை செய்யப்பட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.