2015-09-12 15:46:00

பங்களாதேஷில் மறைமாவட்ட வெள்ளிவிழா - கர்தினால் பிலோனி


செப்.12,2015. பல்வேறு துன்பங்களை எதிநோக்கினாலும், பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள், எண்ணிக்கையில் மட்டுமல்ல, இறைவனுக்கும், சமுதாயத்திற்கும் ஆற்றும் சேவையிலும் வளர்ந்துவருவதாக கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் கூறினார்.

பங்களாதேஷ் நாட்டில், ராஜ்ஷஷி (Rajshashi) மறைமாவட்டம் தன் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவைச் சிறப்பித்துவரும் வேளையில், அப்பகுதியில் நடத்தப்பட்ட திருப்பலி கொண்டாட்டத்தில் மறையுரையாற்றிய, நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் பிலோனி அவர்கள், கிறிஸ்தவர் அல்லாத பல இலட்சம் மக்களிடையே வாழும் சிறுபான்மையான கிறிஸ்தவர்கள், புளிக்காரமாக செயலாற்றவேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.

சிறிய எண்ணிக்கையில் இருக்கும் கிறிஸ்தவர்கள், பங்களாதேஷ் நாட்டில் ஏனைய மக்களுக்குத் தூண்டுதலாகவும், வழிகாட்டிகளாகவும் செயல்படவேண்டும் என்று, கர்தினால் பிலோனி அவர்கள், தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

25 ஆண்டுகளுக்கு முன், பங்களாதேஷ் நாட்டின் ராஜ்ஷஷி மறைமாவட்டம் துவக்கப்பட்டபோது, எட்டு பங்குத் தளங்களும் 10 மறைமாவட்ட அருள் பணியாளர்களும் இருந்தனர் என்பதையும், தற்போது, 19 பங்குத் தளங்களையும், 36 மறைமாவட்ட அருள் பணியாளர்களையும் அம்மறைமாவட்டம் பெற்றிருப்பதையும், கர்தினால் பிலோனி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.