2015-09-11 15:50:00

திருத்தந்தை - சுற்றுச்சூழல் மாற்றத்தால் பாதிப்பு வறியோருக்கே


செப்.11,2015. சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது வறியோரே என்ற காரணத்தால்தான், இந்த மாற்றங்களைக் குறித்து நாம் தீவிரமாகவும், அவசரமாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

‘சுற்றுச்சூழல் நீதி மற்றும் காலநிலை மாற்றத்தை உள்ளடக்கிய நிலையான முன்னேற்றம்’ என்ற கொள்கைக்கென உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளையைச் சேர்ந்த பன்னாட்டு உறுப்பினர்கள் 300 பேரை இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, சுற்றுச்சூழல் மாற்றங்களால் உருவாகும் சமுதாய மாற்றங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அறிவியல், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மனிதர்கள் கரங்களில் எல்லையற்ற சக்தியை வழங்கியுள்ளன என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, இந்தச் சக்தியை, சமுதாய முன்னேற்றத்திற்கு, குறிப்பாக, வறியோரின் வாழ்வுத் தரம் முன்னேறுவதற்குப் பயன்படுத்தவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

அறிவியல், பொருளாதாரம், அரசியல், மதம், என்ற பல்வேறு 'உலகங்களிலிருந்து' வந்துள்ள பிரதிநிதிகள் இந்த அறக்கட்டளையின் கூட்டத்தில் கலந்துகொள்வது மிக முக்கியமான ஓர் அடையாளமாக தனக்குத் தெரிகிறது என்று கூறியத் திருத்தந்தை, பல்வேறு உலகங்களிலிருந்து வரும் மனிதர்கள் உண்மையான உரையாடலை மேற்கொண்டால் மட்டுமே சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு நல்ல தீர்வுகளைக் காண முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

நிலையான முன்னேற்றத்தை மையப்படுத்தி இம்மாத இறுதியில் ஐ.நா.வில் நடைபெறவிருக்கும் கூட்டமும், காலநிலை மாற்றத்தை மையப்படுத்தி இவ்வாண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் உலக உச்சி மாநாடும் சக்திவாய்ந்த முடிவுகளை எடுக்கவேண்டும் என்று தான் விழைவதாக, திருத்தந்தை இச்சந்திப்பில் தன் ஆவலை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.