2015-09-10 16:47:00

திருத்தந்தையுடன் சிரிப்புத் துணுக்குகள் – புதிய வலைத்தளம்


செப்.10,2015. JokeWiththePope.org என்ற வலைத்தள முகவரியின் துணைகொண்டு, சிரிப்புத் துணுக்குகளை பகிர்ந்துகொள்ளும் ஒரு புதிய முயற்சியை, பாப்பிறை மறைபரப்புப்பணி கழகத்தைச் சேர்ந்த அருள்பணி ஆன்ட்ரு ஸ்மால் (Andrew Small) அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் துவக்கியுள்ளார்.

இப்புதன் முதல், அக்டோபர் 2ம் தேதி முடிய நடைபெறும் இந்த போட்டியில் தரமான சிரிப்புத் துணுக்குகளை ஆங்கிலத்திலும், ஸ்பானிய மொழியிலும் இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து வடிவத்திலும், வீடியோ வடிவத்திலும் சிரிப்புத் துணுக்குகளை பதிவு செய்வோர், இந்த முயற்சியின் வழியாக மூன்று பிறரன்புப் பணிகளுக்கு உதவிகள் செய்யமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டீனா நாட்டின் புவெனோஸ் அயிரேஸ் நகரில் உள்ள தெருவோரக் குழந்தைகளுக்கு உதவுதல், எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபாபா நகரில் வீடற்றோருக்கு தங்குமிடங்கள் அமைத்தல், கென்யாவின் நைரோபியில் பசியால் வாடுவோருக்கு உணவளித்தல் ஆகிய மூன்று குறிக்கோள்களை மையப்படுத்தி இந்த சிரிப்புத் துணுக்குத் தளம் இயங்க உள்ளது.

‘நாம் மற்றவரை மையப்படுத்திச் சிரிப்பதற்குப் பதிலாக, ஒருவர் ஒருவரோடு சிரிக்கும்போது,  இறைவனின் அன்பு தனிப்பட்ட வகையில் அங்கு உருவாகிறது’ என்றும்,  ‘சிரிப்பது தனக்கு மிகவும் பிடிக்கும்; இறைவனோடும், மனிதரோடும் நெருங்கி வர சிரிப்பு உதவுகிறது’ என்றும் திருத்தந்தை கூறிய கருத்துக்கள், தன்னை இந்த முயற்சியெடுக்கத்தூண்டியது என்று அருள்பணி ஆன்ட்ரு ஸ்மால் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.