2015-09-10 16:31:00

குவைத்தும் திருப்பீடமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன‌


செப்.10,2015. இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், திருப்பீட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார், குவைத் பிரதமர் Sheikh Jaber Al-Mubarak Al-Hamad Al-Sabah.

திருத்தந்தையுடன் மேற்கொண்ட தனிப்பட்ட சந்திப்புக்குப் பின், திருப்பீடச்செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் Paul Richard Gallagher ஆகியோரையும் சந்தித்து உரையாடிய பிரதமரும், குவைத் வெளியுறவு அமைச்சரும், திருப்பீடத்துடன் ஓர் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர்.

மத்தியக் கிழக்குப் பகுதியிலும், அனைத்துலக அளவிலும் அமைதி மற்றும் நிலையானச் சூழலை உருவாக்க ஒருவருக்கொருவர் உதவி, ஒத்துழைப்பதை வலியுறுத்துவதாக, வத்திக்கானுக்கும் குவைத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த 'புரிந்து கொள்ளுதல் ஒப்பந்தம்' அமைந்தது.

குவைத் பிரதமர் Sheikh Jaber Al-Mubarak Al-Hamad Al-Sabah, திருப்பீடச்செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் ஆகியோர் முன்னிலையில், இவ்வொப்பந்தத்தில், குவைத்தின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான Sheikh Sabah Khalid Al-Hamad Al-Sabah அவர்களும், திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர் பேராயர் Paul Richard Gallagherம் கையெழுத்திட்டனர்.

திருப்பீடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, குவைத் சமூகத்திற்கு, அந்நாட்டின் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் ஆற்றும் பணி குறித்தும், அமைதி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.