2015-09-10 16:24:00

அடுத்தவரைப் புரிந்துகொள்ள உதவும் ஒரே வார்த்தை, 'கருணை'


செப்.10,2015. மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்கு ஆயுதங்களை உருவாக்குவதில் எத்தனையோ மனிதர்கள் மிகக் கடினமாக உழைக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை மறையுரையில் தன் வருத்தத்தை வெளியிட்டார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், "உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்" என்றமைந்த நற்செய்தி வார்த்தைகளின் அடிப்படையில், அமைதி மற்றும் ஒப்புரவு என்ற இரு கருத்துக்களை மையப்படுத்தி மறையுரை வழங்கினார் திருத்தந்தை.

போரும், சண்டைகளும், மோதல்களும் மனித குலத்தை அழிக்குமே தவிர கட்டியெழுப்பாது என்று கூறியத் திருத்தந்தை, கிறிஸ்தவக் குழுமங்களுக்கு இடையிலும் மோதல்கள் நிலவுவதை நாம் வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வார்த்தைகள் சண்டைகளை உருவாக்கும், மற்றவர்களை அழிக்கும் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, மற்றவர்களைத் தீர்ப்பிடாமல், அவர்களைப் புரிந்துகொள்ள வழியாகும் ஒரு வார்த்தை 'கருணை' ஒன்றே என்று எடுத்துரைத்தார்.

ஒப்புரவு அருள்சாதனம் வழங்கச் செல்லும் அருள் பணியாளர்கள், தன்னை அணுகி வரும் மக்களை கண்டனம் செய்யும் வார்த்தைகளால் அழிப்பதற்குப் பதில், கருணையுள்ள வார்த்தைகளால் கட்டியெழுப்ப வேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் அறிவுறுத்தினார்.

"பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்" என்று புனித பவுல் அடியார் சொல்வதே, கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை என்று, தன் மறையுரையின் இறுதியில் திருத்தந்தை கூறினார்.

மேலும், "நாம் ஒவ்வொரு நாளும், 'உமக்கு நன்றி' என்று இறைவனிடம் சொல்கிறோமா?" என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.