2015-09-09 16:30:00

மறைக்கல்வி உரை – 'குடும்பமும் கிறிஸ்தவ சமூகமும்'


செப்.09,2015.  குடும்பம் குறித்த தன் மறைக்கல்வித் தொடரில், 25 வாரங்களை முடித்து, இப்புதனன்று, 26வது வாரத்தில் நுழைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகர் தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கிய உரையில், 'குடும்பத்திற்கும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு' குறித்து விளக்கினார்.

குடும்பம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, 'குடும்பத்திற்கும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு' குறித்து நோக்குவோம். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ளும் அனைவரின் இல்லமாக இருக்கும் திருஅவை, மனித குலமனைத்தின் ஒன்றிப்பிற்கு ஆதாரமாகவும் உள்ளது. இயேசு கிறிஸ்து, மனித குலத்தின் ஒரு பகுதியாக விரும்பி, நம் வரலாற்றினுள் நுழைந்தார். அவர் வரலாற்றில் நுழைந்தது, தந்தையாம் இறைவனின் அன்பு குறித்த நற்செய்திக்கு செவிமடுக்க விரும்பும் மனித குலமனைத்தையும் வரவேற்கும் ஒரு சமூகத்தை அமைக்கவே. ஆகவே, இதன் வழியாக, குடும்பத்திற்கும் திருஅவைக்கும் இடையே நெருங்கிய இணைப்பு ஒன்று உள்ளது. கடைமுடிவான ஆதாரமாக இறைவனைக் கொண்டிருக்கும் அன்பு ஒன்றிப்பை எக்காலத்திலும், குடும்பங்களிலும் பங்குதளங்களிலுமே நாம் சந்திக்கிறோம். நம் குடும்பங்கள் அனைத்தும், இல்லத் திருஅவைகளாக இருப்பதுபோல், நமது பங்குதளங்கள் அனைத்தும் குடும்பங்களை வரவேற்கும் இடங்களாக நோக்கப்படுகின்றன. விசுவாசத்தினால் பிறப்பெடுத்த தொலைநோக்கு, மற்றும், சக்தி வழியே, இந்த 'உடன்படிக்கை', அதாவது, 'நெருங்கிய இணைப்பு' புதுப்பிக்கப்பட வேண்டும். இதன் வழியே, இந்த அன்பின், நற்செய்தி அறிவிப்பின், ஒருமைப்பாட்டின் மையங்களாக விளங்கும் குடும்பமும், பங்குதளங்களும், தம் அனைத்துக் குறைகளையும், இடர்பாடுகளையும் தாண்டி, இறையருளின் துணையோடு, மனிதாபிமானமும், சகோதரத்துவமும் நிறைந்த உலகை வடிவமைக்க, புதுமைகளை ஆற்றட்டும்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.