2015-09-09 15:51:00

புலம்பெயர்ந்தோர் பிரச்சனையை தீவிரமாக உணரவேண்டிய கட்டாயம்


செப்.09,2015. அண்மைய ஆண்டுகளில் மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகளில்,  சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்துவரும் வன்முறைகள், உயிரின் மதிப்பு, மனித மாண்பு, சமயச் சுதந்திரம் என்ற அனைத்து அடிப்படை விழுமியங்களையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இன மற்றும் மத அடிப்படையில் மத்தியக் கிழக்குப் பகுதியில் நடைபெறும் வன்முறைகளை மையப்படுத்தி, செப்டம்பர் 8, இச்செவ்வாயன்று பாரிஸ் மாநகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் இவ்வாறு கூறினார்.

புலம் பெயர்ந்தோர் பிரச்சனையை உலகின் அனைத்து நாடுகளும் இன்னும் தீவிரமாக உணரவேண்டிய கட்டாயம், புலம் பெயர்ந்தோர் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு பாதுகாப்புடன் திரும்புதல், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த, பல்சமய உரையாடலை வளர்த்தல் ஆகிய மூன்று முக்கிய கருத்துக்களில் பேராயர் காலகர் அவர்கள் தன் உரையை வழங்கினார்.

60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகளிலிருந்து வெளியேறும் மக்களை, மீண்டும் தங்கள் சொந்த நாடுகளில் குடியமர்த்தும் திட்டங்கள் பேசப்பட்டன என்றும், இக்கூட்டத்தின் அடுத்த கட்டமாக, 2016ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் மற்றொரு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.