2015-09-09 16:14:00

'புலம்பெயர்ந்தோரே வருக' - இலண்டனில் பல்சமய வழிபாடு


செப்.09,2015. 'புலம் பெயர்ந்தோரே வருக' என்ற மையக் கருத்துடன், வெஸ்ட்மின்ஸ்டர் பேராலய வளாகத்தில் பல்சமய வழிபாடு ஒன்று, செப்டம்பர் 8, இச்செவ்வாயன்று நடைபெற்றது.

இந்த வழிபாட்டிற்கு வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் அனுப்பியிருந்த ஒரு செய்தியை, உயர் மறைமாவட்ட துணை ஆயர் நிக்கோலஸ் ஹட்சன் அவர்கள் வாசித்தார்.

அண்மையில், தான், ஈராக் நாட்டில், புலம் பெயர்ந்தோரைச் சந்தித்த நிகழ்வில், அங்கிருந்தோர், தங்களை அகதிகள் என்று அழைக்க வேண்டாம், சகோதரர்கள் என்று கூப்பிடுங்கள் என்று, தன்னிடம் கேட்டுக்கொண்டதை, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டார்.

புலம் பெயர்ந்தோருக்கு உரிய அனுபவங்களை, தன் குழந்தைப் பருவத்தில் பெற்றிருந்த இயேசு, 'என் அயலவர் யார்?' என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, 'தேவையில் இருப்பவரே உன் அயலவர்' என்று பதில் சொன்னார் என்ற கருத்தை, ஆங்கிலிக்கன் ஆயர், பீட்டர் ஹில் அவர்கள் இந்த வழிபாட்டில் குறிப்பிட்டார்.

"உன் அயலவருடைய இரத்தம் சிந்தப்படும்போது, எதுவும் செய்யாமல் உன்னால் இருக்கமுடியாது" என்பதை எபிரேய நன்னெறி சொல்லித் தருகிறது என்று, யூத ரபி, ஜானெட் டார்லி அவர்கள் எடுத்துரைத்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழும் பெருமளவான மக்களின் புலம் பெயர்தல் இதுவே என்பதால், அனைத்து நாடுகளும் தங்கள் பங்கை அளித்தால் மட்டுமே இந்த நெருக்கடியான நிலையை நாம் சமாளிக்கமுடியும் என்று இந்த வழிபாட்டில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன என்று ICN செய்திக்  கூறுகிறது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.