2015-09-09 16:05:00

புலம் பெயர்ந்தோர் 1000 பேரை நியூஸிலாந்து வரவேற்க தயார்


செப்.09,2015. மனித உரிமைகளை நிலைநாட்ட ஆவல் கொண்டுள்ள எந்த ஒரு நாடும், தற்போது மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து வெள்ளமென வெளியேறும் மக்களின் துன்பங்களை கண்டும் காணாமல் இருக்கமுடியாது என்றும், நியூஸிலாந்து அரசு இந்தப் பிரச்சனைக்கு தகுந்த தீர்வினைத் தேடவேண்டும் என்றும், அந்நாட்டு கர்தினால் ஜான் டியூ (John Dew) அவர்கள் கூறினார்.

இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட போலந்து நாட்டு மக்களுக்கு, நியூஸிலாந்து நாடு புகலிடம் அளித்ததை நினைவுகூர்ந்த கர்தினால் டியூ அவர்கள், நாட்டில் உள்ள 250 பங்குத்தளங்களில் பல, புலம் பெயர்ந்தோருக்கு ஆற்றிவரும் பணிகளையும் சுட்டிக்காட்டினார்.

புலம் பெயர்ந்தோரை இன்னும் அதிகமாக வரவேற்க நியூஸிலாந்து அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, அந்நாட்டு தலத்திருஅவை முழு ஆதரவு தரும் என்று நியூஸிலாந்து ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளைத் தேடிவரும் புலம் பெயர்ந்தோருக்கென உருவாக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்கியிருப்போரை, நியூஸிலாந்து நாடு வரவேற்க வேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கர்தினால் டியூ அவர்களுடன் இணைந்து, ஆங்கிலிக்கன் ஆயர் பிலிப் ரிச்சர்ட்சன் அவர்களும், புலம் பெயர்ந்தோர் சார்பில், அரசுக்கு, விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

புலம் பெயர்ந்தோரில் 1000 பேரை நியூஸிலாந்து கிறிஸ்தவக் குடும்பம் உடனடியாக வரவேற்கக் காத்திருக்கிறது என்று, கர்தினால் டியூ அவர்களும், பேராயர் ரிச்சர்ட்சன் அவர்களும் செய்தியாளர்களிடம் கூறியதாக நியூஸிலாந்து வானொலி கூறியது.

ஆதாரம் : RadioNZ / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.