2015-09-09 16:49:00

அரசி 2ம் எலிசபெத் - மிக நீண்டகால ஆட்சி சாதனை


செப்.09,2015. எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ள 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளில், நிலைபெற்ற ஒரு பாறையாக பணியாற்றியவர், அரசி 2ம் எலிசபெத் என்று, பிரித்தானிய பிரதமர், டேவிட் காமரூன் அவர்கள் கூறினார்.

63 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியாக இருந்த விக்டோரியா அரசியின் பதவிக் காலத்தைத் தாண்டி, அரசி 2ம் எலிசபெத் அவர்கள், 23,226 நாட்கள் அரசியாகப் பணியாற்றியுள்ளது,  பிரித்தானிய வரலாற்றில் ஒரு சாதனை என்று ஊடகங்கள் விவரிக்கின்றன.

அரசர் 6ம் ஜார்ஜ் அவர்கள், 1952ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் காலமானதையடுத்து, தன் 25வது வயதில் அரசியாக மகுடம் சூட்டப்பட்ட 2ம் எலிசபெத் அவர்கள், தன் 89வது வயதில், அரசியாகப் பணியாற்றுவது ஒரு தனிப்பட்ட சாதனை என்று ஊடகங்கள் கூறுகின்றன.

தனது இந்த சாதனையைப் பெரிதுபடுத்தவேண்டாம் என்று, அரசி எலிசபெத் அவர்கள் கூறியுள்ளபோதிலும், இங்கிலாந்து நாடெங்கும் பல்வேறு கொண்டாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன என்று BBC அறிவித்துள்ளது.

தற்போது உலகில் அரசு செய்துவரும் தலைவர்களில், 1945ம் ஆண்டு அரசப் பதவியேற்ற தாய்லாந்து மன்னர், Bhumibol Adulyadej அவர்கள், 69 ஆண்டுகளைக் கடந்து இன்னும் அரசாண்டு வருகிறார் என்பதும், 1952ம் ஆண்டு அரசியாகப் பதவியேற்று, 63 ஆண்டுகளைத் தாண்டி, இன்னும் பணியாற்றும் 2ம் எலிசபெத் அரசி அவர்கள், மிக நீண்ட பதவிக் காலத்தில் இரண்டாம் இடம் வகிக்கிறார் என்பதும், குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.