2015-09-08 17:04:00

அமைதியின்றி வாழ்வது என்பது, நீண்ட, நெடிய வேதனை


செப்.,08,2015. வன்முறைகளுக்கும் மதங்களுக்கும் தொடர்பு இருக்கும் இந்நாட்களில், பேச்சுவார்த்தைகளால் என்ன பலன் என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருப்பீட அதிகாரி அருள்பணி இந்துனில் கொடித்துவாக்கு.

'அமைதி என்பது எப்போதும் இயலக்கூடியதே. மதங்களும் கலாச்சாரமும் உரையாடலில்' என்ற தலைப்பில் அல்பேனியாவின் தலைநகர் திரானாவில் இவ்வாரத் துவக்கத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் நேரடிச் செயலர் அருள்பணி கொடித்துவாக்கு, இன்றையச் சூழலில் உரையாடலுக்கு இருக்கும் இடம் குறித்து விவாதித்தார்.

வன்முறைகளை அகற்றுவதற்கு சிறந்த வழி, மதங்களை ஒழிப்பதே என சில விமர்சகர்கள் கூறுமளவிற்கு நாம் வந்துள்ளோம், என்ற கவலையை வெளியிட்ட திருப்பீட அதிகாரி, மதங்களிடையே உருவாக வேண்டிய உரையாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள கத்தோலிக்க மதம், அதில் சிறப்புப் பங்காற்றி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

'அமைதியைக் கட்டியெழுப்புவது சிரமம் எனினும், அமைதியின்றி வாழ்வது என்பது நீண்ட நெடிய வேதனையாகும்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகளையும் தன் உரையில் எடுத்துரைத்தார், அருள்பணி கொடித்துவாக்கு. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.