2015-09-07 16:10:00

வாரம் ஓர் அலசல் – அன்பின் இரண்டாவது பெயர் இரக்கம்


செப்.07,2015. “புலம் பெயர்ந்த மக்களே, வருக, வருக, உங்கள் பயணம் ஆசிர்வதிக்கப்படட்டும், உங்கள் ஆவல்கள் நிஜமாகட்டும்”. இந்த மாதிரி அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள ஆறுதலும் ஊக்கமும் தருகின்ற வரவேற்பு வரிகள் ஆஸ்ட்ரிய மற்றும் ஜெர்மனியின் மியூனிச் நகர இரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சனி, ஞாயிறு தினங்களில் பல்லாயிரக்கணக்கில் அந்த இரயில் நிலையங்களை வந்து சேர்ந்த சிரியா, ஈராக் போன்ற நாடுகளின் புலம்பெயர்ந்த மக்களை, ஆஸ்ட்ரிய மற்றும் ஜெர்மன் மக்கள் அந்தந்த இரயில் நிலையங்களில் இரண்டு பக்கங்களிலும் நின்றுகொண்டு கைதட்டி, உணவுப்பொருள்களையும், தண்ணீரையும் கொடுத்து வரவேற்றனர். தெரியாத மொழி, அறியாத நாடு என, ஆயிரமாயிரம் கஷ்டங்களையும் கனவுகளையும் மனதில் சுமந்து கொண்டு சிறு குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வந்த மக்கள் வரவேற்கப்பட்டதைப் பார்த்தபோது, அது மனதில் ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் துருக்கி, பின்னர், கிரீஸ், மாசிடோனியா, செர்பியா போன்ற நாடுகளைக் கடந்து இறுதியில் ஹங்கேரியில் குவிந்திருந்த இம்மக்களை ஏற்பதற்கு ஆஸ்ட்ரிய நாடு தனது எல்லைக் கட்டுபாட்டைத் தளர்த்தி பேருந்துகளை அனுப்பி அந்த மக்களை அழைத்து வந்துள்ளது. தன்னார்வத் தொண்டர்கள் சிலர், இலவசமாகவே அவர்களைத் தங்கள் வாகனங்களில் அழைத்து வந்துள்ளனர். ஜெர்மனிக்குச் செல்லும் மக்களுக்கும் அவர்கள் ஏற வேண்டிய இரயில்களை அடையாளம் காட்டி அனுப்பி வைத்துள்ளது ஆஸ்ட்ரியா. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஹிட்லரின் நாத்சி அடக்குமுறைகளின் வடுக்களைக் கொண்டிருக்கும் ஜெர்மன் நாடு, அதற்குப் பலமடங்காகவே பிராயச்சித்தம் தேடிவிட்டது. தேடியும் வருகிறது. இஞ்ஞாயிறு மாலையில் ஆஸ்ட்ரியாவில் 12 ஆயிரத்துக்கு அதிகமாகவும், ஜெர்மனியில் ஏறக்குறைய 18 ஆயிரமும் புலம்பெயர்ந்த மக்கள் வந்து சேர்ந்துள்ளனர். இம்மக்கள் தங்கியிருக்கவும், மொழி கற்கவும், குளிர்காலத் தேவைகளுக்கும் வசதி செய்து கொடுத்து, இவர்களைப் பராமரிக்க மேலும் காவல்துறையினரை நியமிப்பதற்கு, ஜெர்மன் மத்திய கூட்டணி அரசு 600 கோடி யூரோக்களைச் செலவழிப்பதற்கு இத்திங்களன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள், குடியேற்றதாரர் என, இவ்வாண்டில் எட்டு இலட்சம் பேரை ஏற்கத் திட்டமிட்டுள்ளது ஜெர்மனி.

இந்நாள்களில், போர் மற்றும் வன்முறைக்கு அஞ்சி, பல்லாயிரக்கணக்கான மக்கள், நடந்தும், படகுகளிலும் பல நாள்கள் பயணம் செய்து ஐரோப்பாவில் புகலிடம் கேட்கின்றனர். இந்த மனிதாபிமான அவலம், ஐரோப்பிய நாடுகளின் பிறரன்புக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. அருளாளர் அன்னை தெரேசா இறைவனடி சேர்ந்த செப்டம்பர் 5ம் நாளான கடந்த சனிக்கிழமையன்று உலக பிறரன்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாளில் ஆஸ்ட்ரியாவும், ஜெர்மனியும் சிறந்த பிறரன்புச் சேவையை ஆற்றியுள்ளன. “அன்புதான் உங்கள் பலவீனமென்றால் நீங்கள்தான் இந்த உலகத்தின் பலசாலி” என்று சொன்ன அன்னை செரேசாவின் வாக்கு, இந்நாள்களில் அதிகம் தேவைப்படுகின்றது. ஆப்ரிக்கா, எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளின் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை இத்தாலி நாடு ஏற்கனவே ஏற்றுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், இந்தப் புலம்பெயர்ந்த மக்களை ஏற்குமாறு ஐரோப்பிய கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்தார்.

"ஐரோப்பாவில் ஒவ்வொரு பங்கும், துறவற இல்லமும், திருத்தலமும் புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. ஐரோப்பாவிலுள்ள என் சகோதர ஆயர்கள் இந்த எனது அழைப்புக்குச் செவிமடுக்க வேண்டுமெனக் கேட்கிறேன். எனது சொந்த மறைமாவட்டமான உரோம் தொடங்கி வத்திக்கானிலுள்ள இரு பங்குகளும் இந்தப் புலம்பெயர்ந்த குடும்பங்களை ஏற்பதற்கு தயாராகி வருகின்றன. ஆயர்கள், அன்பின் இரண்டாவது பெயர் இரக்கம் என்பதை நினைவில் கொண்டு, உண்மையான மேய்ப்பர்களாக, உங்கள் மறைமாவட்டங்களில் இந்தக் குடும்பங்கள் ஏற்கப்பட வழி செய்யுங்கள். இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டுக்குத் தயாரிப்பாக, இந்த இரக்கச் செயல்களைச் செய்யுங்கள். போர் மற்றும் பசிக்குப் பயந்து கடும் துன்பங்களை எதிர்கொண்டு வாழ்வில் நம்பிக்கை இழந்து வரும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவுங்கள். இச்சின்னஞ்சிறிய மற்றும் கைவிடப்பட்ட இவர்களுக்கு அருகில் இருக்க வேண்டுமென்று நற்செய்தியும் சொல்கிறது. இம்மக்களுக்கு நாம் செய்யும் உதவி இறைவனுக்கே ஆற்றுவதாகும். இம்மக்களுக்கு உண்மையான நம்பிக்கையை வழங்குகள். கடந்த வார இறுதியில் அன்னை தெரேசாவின் நினைவு நாளைச் சிறப்பித்தோம். அன்னை தெரேசா அவர்களின் வாழ்வில் நாம் பார்த்தது போன்று, செயல்கள் வழியாக இறைவனின் இரக்கமும், கருணையும் வெளிப்படுகின்றன. கிறிஸ்தவ நம்பிக்கை தளராதது. மன உறுதியுடன் பாதுகாப்பான இறுதி நிலையை அடைவதை நோக்கிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்நம்பிக்கை உதவுகின்றது. பிறருக்குத் தனது கதவுகளை மூடும் பங்கோ, குடும்பமோ, சமூகமோ இறைவனுக்கு ஏற்ற செயலைச் செய்யவில்லை, இப்படி மூடுவது பாவமாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு நேயர்களே, அன்பு, பிறரன்பு என்று அடிக்கடி பேசுகிறோம். ஆனால் அவை நம் தெளிவான செயல்களில் வெளிப்பட வேண்டும். இந்த உலகம் சுழல்வதே அன்பில்தான். ஒருவர்மீது நாம் அன்பு செலுத்துவதால்தான் நாம் அன்பாக இருக்கிறோம். அன்பு செலுத்துவதற்குக் காரணம் எதுவும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை(பாலோ கோயலோ). இலங்கையின் முள்ளிவாய்க்கால் அவலங்கள் இந்நாள்களில் வேறு இடங்களில் தொடர்கின்றன. இச்சனிக்கிழமையன்று உலக பிறரன்பு நாளை எப்படி சிறப்பித்தீர்கள்?

பிறரன்பு என்பது, செல்வந்தர்கள் ஏழைகளுக்கு கொடுத்து உதவுவது மட்டுமல்ல, ஆனால் ஒவ்வொரு நாளும் மக்கள் பிறருக்கு உதவுவது என்று உலக அனைத்துலக பிறரன்பு நாளில் ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், இக்காலத்தில் மனிதத் துன்பங்களைப் பார்க்கும் நாம் நம் பிறரன்புப் பணிகளை அதிகரிக்க வேண்டும், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்று போர்கள் இடம்பெறும் இடங்களிலிருந்து தஞ்சம் கோரும் 2 இலட்சம் மக்களை ஐரோப்பிய நாடுகள் ஏற்க வேண்டும், ஏற்கனவே புகலிடம் அளித்துள்ள நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘அறம் செய்ய விரும்பு’என்ற ஒரு புதிய திட்டத்தில், ஏழை எளியவர்க்குப் பல்வேறு விதங்களில் உதவிகள் செய்வதற்கு தன்னார்வத் தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக வாசித்தோம். நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் இத்திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து இத்திட்டத்தை ஊக்குவித்துள்ளார் என்றும் வாசித்தோம்.

ஒருநாள் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம், வைக்கோல் பொதிக்குள் ஓர் இரும்பு ஊசி கிடக்கிறது, அதை எப்படி வெளியே எடுப்பது என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவர் எழுந்து, இது மிகவும் எளிது, வைக்கோல் போருக்குத் தீ வைத்துவிட்டால் வைக்கோல் முழுவதும் எரிந்துவிடும். இரும்பு மட்டும் எஞ்சியிருக்கும். அந்த ஊசியை நாம் ஒரு நிமிடத்தில் பிரித்து எடுத்து விடலாம் என்றார். இன்னொரு மாணவர் எழுந்து, ஒவ்வொரு வைக்கோல் பிரியாக எடுத்து வேறோர் இடத்தில் வைத்தால், ஊசி இருக்கும் இடத்தை நாம் கண்டுபிடித்து விடலாம் என்றார். அதற்கு ஆசிரியர், வைக்கோலை எரித்து ஊசியை கண்டுபிடித்து விடலாம். வைக்கோல் போர் முழுவதும் எரிந்தால் மிகுந்த நஷ்டம் ஏற்படும். அந்த வைக்கோலிலிருந்து எப்படியும் ஊசியை நாம் பிரித்து எடுக்க வேண்டும். ஏனென்றால், அந்த வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளுக்குக் கைகள் கிடையாது. அவை சாப்பிடுகிறபோது ஊசியையும் விழுங்கி விடும் ஆபத்து இருக்கிறது. மேலும், வைக்கோலைப் பிரியாக எடுத்து வைக்க கூடுதல் மனிதர் தேவைப்படுவார்கள். அதிக நேரமும் எடுக்கும். அப்படிப் பிரிக்கும்போது ஊசி கையில் குத்தி காயம்கூட ஏற்படலாம். எனவே வேறு ஏதாவது எளிய வழி இருக்கிறதா என்று ஆசிரியர் மீண்டும் கேட்டார். அப்போது ஒரு மாணவர் எழுந்து, நம்மிடம் ஒரு காந்தக்கல் இருக்குமானால், அதை வைக்கோல் பொதியின்மீது காட்டி வைக்கோல் அசைவிலிருந்து ஊசி இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்றார். இதுவே சரியான விடையாக ஆசிரியர் ஏற்றுக்கொண்டார்.

அன்பு நேயர்களே, நாம் இரும்பாகவும், இறைமை காந்தமாகவும் இருக்கிறது. காந்தத்தில் இரும்புக்கான ஈர்ப்பு இருக்கிறது. இரும்பில் காந்தத்திற்கான ஈர்ப்பு இருக்கிறது. எனவே நம்மிடம் அன்பு என்ற இரும்பு அதிகம் வளர வளர இறைமை என்ற ஈர்ப்பு சக்தியை நாம் அதிகம் உணரலாம். உண்மையான அன்பில் இறைச்சாயல் வெளிப்படுகின்றது. இறையன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இறைமையோடு நாம் ஒன்றிணைந்து வாழ்ந்தால்தான் நம்மில் பிறர்மீது அன்பும், இரக்கமும், கரிசனையும் வளரும். இரக்கம், கருணை, காருண்யம், பந்துத்துவம், பட்சம், பாசம், நேசம், விசுவாசம், அபிமானம், காதல், பக்தி என பன்னிரெண்டு விதமாக அன்பு பகுத்துப் பார்க்கப்படுகின்றது. இந்தப் பண்புகளில் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு கிடையாது. ஒவ்வொன்றும் உன்னதமானது. கைவிடப்பட்டு, அநாதரவாய் நிற்கும் எளியவர்கள்மேல் செலுத்துகிற அன்புக்குப் பெயர் இரக்கம். இந்த இரக்கச் செயல்கள் வளரட்டும். அன்பின் இரண்டாவது பெயர் இரக்கம். ஆதரவற்றுத் தவிப்பவர்களுக்கு ஆரோக்ய அன்னை அருள் பொழிவாராக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.