2015-09-07 16:52:00

கிறிஸ்தவர்களின் சித்ரவதைகளுக்கு நாடுகளின் மௌனமும் காரணம்


செப்.07,2015. சக்திவாய்ந்த நாடுகள், தீமை கண்டும் மௌனம் காப்பதால், கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்படுவது இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, 'சாபத்' என்ற ஓய்வு நாளின்போது, இயேசு நிகழ்த்திய புதுமையால் கோபமுற்ற பரிசேயரும் மறைநூல் அறிஞரும், இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டது குறித்து விவரிக்கும் இந்நாளைய நற்செய்தி பற்றி தன் கருத்துக்களை வழங்கியபோது, இன்றும் கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர், தங்கள் சொந்த இடங்களைவிட்டு விரட்டப்படுகின்றனர் என்ற கவலையை வெளியிட்டார்.

மலைப் பொழிவின் இறுதியில், இயேசு மக்களை நோக்கி, 'உங்களை செபக்கூடங்களுக்கு இழுத்துச் செல்வார்கள், உங்களைக் கொடுமைப்படுத்துவார்கள்' என்று கூறியதெல்லாம், கிறிஸ்தவர்களுக்கு நிகழ்பவையே என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய நிலைகளைத் தடுக்கும் சக்தியுடைய பெரிய நாடுகள் அமைதி காப்பதாலேயே, கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

லிபியா நாட்டு கடற்கரையில் கொல்லப்பட்ட எகிப்திய கிறிஸ்தவர்கள் குறித்தும், அர்மேனியாவில் கொல்லப்பட்ட, மற்றும், அங்கிருந்து விரட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்தும் தன் மறையுரையில் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் காலையில், திருத்தந்தை நிறைவேற்றியக் கூட்டுத் திருப்பலியில், அர்மேனியாவின் சிலிசியா முதுபெரும் தந்தை இருபதாம் கிரகோரியோ பியெத்ரோ காப்ரோயான், கீழை வழிபாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.