2015-09-05 16:31:00

ஆசிரியர் பணியில் முன்னாள் குழந்தைத் தொழிலாளி


செப்.05,2015. தமிழகத்தின் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் குழந்தைத் தொழிலாளி ஒருவர் தற்போது ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

13 வயதில் படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பப்பட்ட ஆர்.கனகராஜ் என்பவர், பின்னர் குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டு, தற்போது ஆசிரியர் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

செப்டம்பர் 05, இச்சனிக்கிழமையன்று இந்தியாவில் தேசிய ஆசிரியர் தினம் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த கனகராஜ் அவர்கள் தனது முந்தைய மற்றும் தற்போதைய நிலையை பெருமையுடன் விளக்கியுள்ளார்.

தனது தந்தை மாற்றுத்திறனாளி என்பதால், ஒருவேளை உணவுக்காகப் படிப்பைத் துறந்து 13 வயதில் தோட்ட வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது என்றும், பின்னர் பல வகைகளில் முயற்சித்து, கல்வியறிவைப் பெற்று கடந்த 9 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் கனகராஜ் கூறினார்.

மாற்றுத்திறனாளியான தனது அப்பாவால், ஒரு கட்டத்தில் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்பதால், 7-ம் வகுப்பு படிக்கும்போதே மொத்த குடும்பப் பாரத்தையும் சுமக்க வேண்டிய நிலையில், கனத்த மனதுடன் படிப்பைக் கைவிட்டு, முழு நேரமாக தோட்ட வேலைக்குச் செல்ல தொடங்கிய கனகராஜ், ஏறக்குறைய ஓராண்டு கழித்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புமுறை திட்ட அலுவலர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

அந்த அலுவலர்கள் கொடுத்த உதவித்தொகையுடன் சிறப்புப் பள்ளிக் கல்வி முறையை  ஆர்வத்துடன் கற்று, இன்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் கனகராஜ்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

 

 








All the contents on this site are copyrighted ©.