2015-09-04 16:05:00

பள்ளிகளுக்குச் செல்ல முடியாத 1,30,00000 சிறுவர், சிறுமியர்


செப்.04,2015. மத்தியக் கிழக்குப் பகுதியிலும், ஆப்ரிக்காவின் வட பகுதியிலும் நிலவிவரும் தொடர் மோதல்களால், 1 கோடியே 30 இலட்சம் சிறுவர், சிறுமியர் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்று, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF இவ்வியாழனன்று அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

போரிடும் குழுக்கள், அண்மைய ஆண்டுகளில், பள்ளிகளைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாலேயே, சிறுவர் சிறுமியரின் அடிப்படை உரிமையான கல்வி, அதிர்ச்சி தரும் இந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக போர்ச் சூழலில் துன்புறும் சிரியா, ஈராக், ஏமன், லிபியா ஆகிய நாடுகளில் மட்டும் 9000த்திற்கும் அதிகமான பள்ளிகள் சேதமடைந்துள்ளன அல்லது, போரிடும் குழுக்களின் தங்குமிடங்களாக மாறியுள்ளன என்று UNICEF அறிக்கை கூறியுள்ளது.

பள்ளிக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ள இந்தத் தலைமுறை, எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை ஏதுமற்ற எண்ணங்களைச் சுமந்து வாழ்வது, மிகப் பெரிய ஆபத்து என்பதையும், இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

உலக அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் இந்தப் பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வுகளைக் காணவேண்டும் என்றும், UNICEF வெளியிட்டுள்ள இவ்வறிக்கை வேண்டுகோள் விடுக்கிறது. 

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.