2015-09-04 15:43:00

கரையில் ஒதுங்கும் உடல்கள், ஐரோப்பாவுக்கு பெரும் இழுக்கு


செப்.04,2015. ஒட்டுமொத்த ஐரோப்பா, செல்வம் கொழிக்கும் ஓர் இடமாக இருக்கும்போது, ஆபத்தான கடல் பயணங்களால் மரணமடைந்து, கரையில் ஒதுங்கும் உடல்கள், ஐரோப்பிய சமுதாயத்திற்கு பெரும் இழுக்காக அமைகிறது என்று, இங்கிலாந்து கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

சிரியாவிலிருந்து தப்பித்துச் சென்ற ஒரு குடும்பத்தின் 3 வயது சிறுவன், Aylan Kurdi, ஒரு சடலமாக கடற்கரையில் கிடந்த படம், சமூக வலைத்தளங்கள் வழியே பரவி, உலக மக்கள் மத்தியில் ஆழ்ந்த துயரத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கி வருகிறது.

இது குறித்து, ITV என்ற தொலைக்காட்சியின் செய்தி நிகழ்ச்சியில் பேசிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், புலம் பெயர்தல் என்ற உலகளாவிய உண்மை, இதுவரை ஒரு ஏட்டளவு பாடமாக இருந்தது என்றும், இச்சிறுவனின் படம், அதை ஒரு மனித பிரச்சனையாக, நமக்கு முன் சவாலாக வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஐரோப்பாவிற்குள் நுழைய முயலும் மக்களைக் குறித்து, ஆங்கிலிக்கன் சபையின் தலைவரான கான்டர்பரி பேராயர், ஜஸ்டின் வெல்பி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பிரிவுச் சுவர்களை உடைப்பதும், அன்னியரை வரவேற்பதும் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளம் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.