2015-09-04 15:34:00

ஐரோப்பாவில், மனிதாபிமான தீர்வுகள், அவசரத் தேவை- கர்தினால்


செப்.04,2015. தற்போது ஐரோப்பா சந்திக்கும் புலம் பெயர்ந்தோரின் பிரச்சனையில் நாம் காட்டும் கருணை நிறைந்த செயல்கள், கருணையைக் கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பிற்கு தகுந்த ஒரு பதிலிருப்பாக அமையும் என்று, லிஸ்பன் முதுபெரும் தந்தை, கர்தினால் Manuel Clemente அவர்கள் கூறியுள்ளார்.

தான் அனுப்பியுள்ள மேய்ப்புப்பணி மடலில், ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் புலம் பெயர்ந்தோர் பிரச்னைக்கு, குறுகிய கால, மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவைப்படுகின்றன என்று கூறும் கர்தினால் Clemente அவர்கள், தற்போதையச் சூழலில், மனிதாபிமான தீர்வுகள் அவசரத் தேவையாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

1716ம் ஆண்டு, திருத்தந்தை, 11ம் கிளமென்ட் அவர்களால் ஓர் உயர் மறைமாவட்டமாக உயர்த்தப்பட்ட லிஸ்பன், 2016ம் ஆண்டு, மறைமாவட்ட சிறப்பு மாமன்றத்தைக் கொண்டாட உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ள கர்தினால் Clemente அவர்கள், 2017ம் ஆண்டு, பாத்திமா அன்னை காட்சி தந்த நூறாவது ஆண்டு சிறப்பிக்கடவிருப்பதையும் தன் மடலில் நினைவுகூர்ந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.