2015-09-04 15:58:00

உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது


செப்.04,2015. உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்றும், தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன எனவும், வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 192,000 சதுர கீ.மீ. பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன.

காடுகள் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருவதால் மனித நாகரீகம் துவங்கியபோது இருந்த மரங்களின் எண்ணிக்கை, தற்போது பாதியாக குறைந்துள்ளது. இத்தகவல்கள், ‘நேச்சர்’ என்ற ஆய்விதழில் இப்புதனன்று வெளியாகியுள்ளன.

நீராதார இருப்பின் அளவுகளுக்கு இடையே இடைவெளி மிகுந்துள்ளதால், மரங்களின் வளர்ச்சி விகிதமும் கடுமையாகக் குறைந்துள்ளது என்றும், அடர்ந்த காடுகள் பல, விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும், மரங்கள் காணாமல் போனதற்கு காரணமாகியுள்ளது என்றும் இந்த ஆய்விதழ் சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஆய்வின் வழியாக, புவி வெப்பமடைதலில் மனிதர்களின் செயல்பாடுகள் குறித்த புதிய புரிதல்களும், உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய புதிய உற்பத்திக் கொள்கைகள் பற்றியும் சிந்திக்க வேண்டிய காலக்கட்டம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.