2015-09-03 15:20:00

பாவி என்பதை உணர்கையில், இயேசுவைச் சந்திக்கலாம் - திருத்தந்தை


செப்.03,2015. நாம் பாவிகள் என்பதை உணரும் வேளையில், இயேசுவைச் சந்திக்கக்கூடிய அற்புதம் நிகழ்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

திருத்தந்தையும் மறைவல்லுனருமான புனித பெரிய கிரகோரியாரின் திருநாள் திருப்பலியை, செப்டம்பர் 3, இவ்வியாழன், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

அதிசயமான மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, தான் ஒரு பாவி என்று அறிக்கையிட்ட நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி, திருத்தந்தை தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இயேசுவின் சக்தியை உணர்ந்த பேதுரு, அவருக்கு முன் தான் ஒரு பாவி என்பதை ஏற்றுக்கொண்டார், ஆனால், இயேசுவின் சக்தியையும், அறிவுத்திறனையும் அறிந்த பரிசேயர்கள், அவரைக் கண்டு அதிசயிக்காமல், தங்கள் அகம்பாவத்தில் இன்னும் ஆழ்ந்து சென்றனர் என்ற வேறுபாட்டை திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடும் புனித பேதுரு, தன்னை ஒரு பாவி என்றும் அறிக்கையிடுகிறார் என்று கூறியத் திருத்தந்தை, தீய ஆவிகளும், இயேசுவை மானிட மகன் என்று கண்டுகொண்டன என்றாலும், அவை, தங்கள் அகம்பாவத்தை விட்டுக் கொடுக்கவில்லை என்று எடுத்துரைத்தார்.

இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடுவது எளிது; ஆனால், அதேநேரம், நாம் பாவிகள் என்று அறிக்கையிடுவது கடினம் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, நம் பாவத்தை அறிக்கையிடும் தாழ்ச்சியே, புனித பேதுருவைப் போல, நம்மை இறைவனிடம் நெருக்கமாக அழைத்துச் செல்லும் வழி என்று விளக்கிக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.