2015-09-03 14:49:00

பங்களாதேஷில், மனிதாபிமானம் மிக்க மருத்துவர், மரணம்


செப்.03,2015. மனிதர்களை பேணிக்காப்பது என்ற கொள்கையை எவ்விதம் ஒருவர் உண்மையிலேயே மனதில் கொண்டு வாழமுடியும் என்பதற்கு, மருத்துவர் எட்ரிக் பேக்கர் (Dr Edric Baker) அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பங்களாதேஷ் ஆயர் ஒருவர் கூறினார்.

கடந்த 35 ஆண்டுகளாக, பங்களாதேஷில், வறுமைப்பட்ட மக்களிடையே மருத்துவப் பணியாற்றிவந்த மருத்துவர் எட்ரிக் பேக்கர் அவர்கள், இச்செவ்வாய் மரணமடைந்து, இப்புதனன்று அடக்கம் செய்யப்பட்டார்.

அவரைக் குறித்து, மைமென்சிங் மறைமாவட்ட ஆயர், போனென் பால் கூபி (Mgr Ponen Paul Kubi) அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், மருத்துவர் பேக்கர் அவர்களை, அனைத்து மதத்தவரும் 'சகோதரர்' என்றே அழைத்தனர் என்று குறிப்பிட்டார்.

நியூசிலாந்து நாட்டில் பிறந்த எட்ரிக் பேக்கர் அவர்கள், பங்களாதேஷ் நாட்டில் ஆற்றிய பணியைக் கண்டு, அந்நாட்டு அரசு அவருக்கு பங்களாதேஷ் குடிமகனாகும் உரிமையை அளித்தது.

தன் 74வது வயதில் இறையடி சேர்ந்த மருத்துவர் பேக்கர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில், கிறிஸ்தவர்கள்,  இந்துக்கள், இஸ்லாமியர் என்ற அனைத்து மதங்களையும் சார்ந்த எளியோர், ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.