2015-09-03 15:43:00

நீடிப்புத் திறனுள்ள முன்னேற்றம் - திருப்பீடத்தின் நிலைப்பாடு


செப்.03,2015. ஐ.நா. அவை கூட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள திட்ட வரைவு, வறுமையைக் களைவதையும், அனைத்து மக்களும் மாண்புடன் வாழ்வதையும் உறுதி செய்துள்ளது கண்டு, திருப்பீடம் மகிழ்கிறது என்று, செப்டம்பர் 1, இச்செவ்வாயன்று, நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், திருப்பீடம் சமர்ப்பித்த நிலைப்பாட்டு அறிக்கை கூறுகிறது.

"2030 - நீடிப்புத் திறனுள்ள முன்னேற்றம் (Sustainable Development) நோக்கிய திட்டவரைவு: நமது உலகை மறுமலர்ச்சியடைய செய்தல்" என்ற தலைப்பில் ஐ.நா. அவை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையைக் குறித்து தன் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள திருப்பீடம், இவ்வாறு கூறியுள்ளது.

தனி மனிதர்களை முன்னேற்றத்தின் மையமாகக் கொண்டு, ஐ.நா. அறிக்கை  உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்வைத் தருகிறது என்று குறிப்பிடும் திருப்பீடத்தின் அறிக்கை, ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள 'மனிதர்கள்' என்ற சொல்லில் யாரும் ஒதுக்கப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அண்மைய திருமடலில் கூறியிருப்பதுபோல, மனித முன்னேற்றம், சூழ்நிலை பாதுகாப்பையும் உள்ளடக்கிய முன்னேற்றமாக இருக்கவேண்டும் என்று திருப்பீட அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித முன்னேற்றத்தில், குடும்பங்களுக்குள்ள முக்கியத்துவம், கருவில் உள்ள குழந்தைகளுக்கு பிறக்கும் உரிமை வழங்குவது, ஆண்-பெண் என்ற பாலின உரிமை வழங்குவது ஆகிய கருத்துக்களுக்கும் ஐ.நா. அறிக்கை தகுந்த மதிப்பளிக்க வேண்டும் என்று திருப்பீடத்தின் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.