2015-09-02 15:52:00

புதன் மறைக்கல்வி உரை – 'நற்செய்தி அறிவிப்பில் குடும்பங்கள்'


செப்.02,2015.  'குடும்பம்' குறித்த தன் புதன் மறைக்கல்வி உரை தொடரில்,  பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், 'நற்செய்தி அறிவிப்பில் குடும்பங்கள் வழங்கும் பங்களிப்பின் முக்கியத்துவம்' குறித்து எடுத்துரைத்தார்.

விசுவாசத்தைப் பரப்புவதிலும், மனிதாபிமானம் நிறைந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவுவதிலும் குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்து இன்று காண்போம். இறைவன் மீது நாம் கொள்ளும் விசுவாசத்தின் முதன்மை இடம் குறித்து வலியுறுத்தும் இயேசு, தன் சீடர்களை நோக்கி, 'கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்' என்கிறார். கிறிஸ்தவ வாழ்வில், குடும்ப உறவுகள், மாற்றம் பெறுவதுடன் விரிவாக்கமும் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, ஞானத்தந்தை ஞானத்தாய் என்ற புதிய உறவுகளிலும், மற்றவர்களை, குறிப்பாக, தேவையிலிருப்போரை, சகோதர சகோதரிகளாக நோக்குவதிலும்,  இறை அன்பை இவ்வுலகிற்கு கொணர்வதிலும், நம் உறவுகள், மாற்றமும், விரிவும் அடைகின்றன. இத்தகைய வழிகள் மூலம், நாம், அனைத்து சமூக உறவுகளின் புதுப்பித்தலுக்கான நம்பிக்கையின் அடையாளமாகவும், ஓர் ஆசீர்வாதமாகவும் மாறுகிறோம். குடும்பங்களுக்குள் விசுவாசம் என்பது ஒன்றிப்பு மற்றும் அன்பின் மிக பலம் பொருந்திய உந்துசக்தியாக மாறுவதுடன், நற்செய்திக்கு நம்பத்தகும் சாட்சியமாக வாழவும் தூண்டுதலைத் தருகிறது. இந்த நம் சாட்சிய வாழ்வு,  இன்றைய காலக்கட்டத்தில், ஏனையவர்களுடன் தொடர்பின்றியும், ஆன்மீக வறட்சியிலும் வாழவிரும்பும் சமூகங்களிடையே அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றது. கானா திருமணத்தின் திராட்சை இரசம்போல், நம் குடும்பங்கள் அனைத்தும் இவ்வுலகிற்கு, இறையன்பின் இளஞ்சூட்டையும், மகிழ்வையும் கொணரவேண்டும் என்ற நோக்கில், நம் குடும்பங்களுக்காகவும், உலகில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்காகவும் செபிப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதிக்காக செபிக்குமாறு மக்களை நோக்கி விண்ணப்பித்தார்.

இரண்டாம் உலகப்போர் நிறைவுற்றதன் நினைவு, இந்நாட்களில் தூர கிழக்கு நாடுகளில் சிறப்பிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போரைப் போன்ற துயர் நிகழ்வுகளும், இரத்தம் சிந்தல்களும் மீண்டும் இடம்பெறாமல், மக்கள் அமைதியில் வாழ, இறைவனை நோக்கியும், அன்னைமரியின் பரிந்துரைக்காகவும் செபிப்போம். இந்த அமைதிக்கான ஏக்கம், அனைவர் மனதிலும், குறிப்பாக, இரத்தம் சிந்தும் பல்வேறு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனங்களில் இருந்துகொண்டே இருக்கின்றது. சிறுபான்மை சமூகத்தினர் கொடுமைப்படுத்தப்படுதல், கிறிஸ்தவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுதல், எத்தனையோ மூடத்தனமான அழிவுகள், ஆயுத உற்பத்திகள், ஆயுத கடத்தல்கள், அப்பாவி மக்களின் இரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட ஆயுதங்களும், கைகளும் என, எத்தனையோ கொடூர நிகழ்வுகள்!. மீண்டும் போர் என்பதே வேண்டாம். இந்த விண்ணப்பமே, நம் உள்ளங்களிலிருந்தும், நல்மனதுடையோர் உள்ளங்களிலிருந்தும் அமைதியின் இளவலாம் இயேசுவை நோக்கி எழுப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் அமைதிக்கான விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.