2015-09-02 16:33:00

சிரியாவை விட்டு, சுனாமி போல இளையோர் வெளியேறுவதால் ஆபத்து


செப்.02,2015. ஆழிப் பேரலை போல, சிரியாவை விட்டு, இளையோர் வெளியேறி வருவதை நிறுத்த வேண்டும் என்று, மேல்கத்திய, கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகோரியஸ் அவர்கள், ஓர் மடலின் வழியே விண்ணப்பித்துள்ளார்.

சிரியாவிலிருந்தும், லெபனான், மற்றும் ஈராக்கிலிருந்தும், இளையோர் வெளியேறிச் செல்வது, தனக்கு ஆழ்ந்த வேதனையைத் தருகிறது என்று கூறிய, முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகோரியஸ் அவர்கள், தங்கள் நாடுகளை விட்டு இளையோர் பெருமளவில் வெளியேறுவதால், மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளிலும் பிரச்சனைகள் எழுகின்றன என்று தன்  மடலில் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி போல இளையோர் வெளியேறுவதால், தலத்திருஅவை, பங்குத்தளங்கள், கிறிஸ்தவ நிறுவனங்கள், தாய்நாடு என்று அனைத்து நிலைகளிலும் எதிர்காலம் இல்லை என்ற வேதனை உருவாகியுள்ளது என்று, முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகோரியஸ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லையெனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன், 11,70,000 என்ற அளவில் சிரியாவில் குடியிருந்த கிறிஸ்தவர்களில், தற்போது, 4,50,000 பேர், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ளனர் என்று, Aid to the Church in Need (ACN) என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு கூறுகிறது. 

ஆதாரம் : ACN/ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.