2015-09-02 16:01:00

கடுகு சிறுத்தாலும்.... : நம் நன்மை தீமைக்கு யார் காரணம்?


ஜப்பானில் வாழ்ந்த ஜென் துறவி ஒருவர், எங்கே சென்றாலும் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துச் செல்வார். இதைக் கண்ட அவரது சீடர்கள், ‘நம்ம குருநாதருக்கு, தான் பெரிய அழகன் என்று நினப்பு. எப்போதும், கண்ணாடியில் தன் முகத்தை தானே பார்த்து இரசித்துக் கொண்டு இருக்கிறார்!’ என்று கேலி செய்தனர். சீடர்கள் இப்படி பேசுவது குருநாதருக்கும் தெரியும். ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

ஒருநாள், அந்த ஜென் துறவியைப் பார்க்க ஓர் அரசர் வந்திருந்தார். அவர் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த அரசருக்கு ஆச்சரியம்.

‘ஐயா, நீங்கள் அனைத்தையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா?’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.

துறவி சிரித்தார். ‘அரசே, எனக்கு ஏதாவது பிரச்சனை என்று வந்தால், அந்தப் பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள, இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் என்னுடைய தலைவலிக்கு முழுமுதல் காரணம் என்று புரிந்துகொள்வேன்! பிறகு, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முயலும்போது, அதைச் செய்வதற்குப் பொருத்தமான நபர் யார் என்று தேடும்போது, மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் இந்தத் தலைவலியைத் தீர்க்கக்கூடிய மருந்து என்று புரிந்து கொள்வேன். எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால், என்னுடைய நல்லது, கெட்டதுகளுக்கு யார் காரணம் என்கிற உணர்வை நான் மறப்பதில்லை’ என்று பதிலளித்தார் ஜென் துறவி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.