2015-09-02 15:58:00

இவ்வுலகை ஆள்வதற்கு கொடுக்கப்பட்ட கட்டளை, அழிப்பதற்கல்ல


செப்.02,2015. தன் துறவு சபையைச் சேர்ந்த சகோதரர்கள், விறகுக்காக மரம் வெட்டும்போது, முழு மரங்களை அவர்கள் வெட்டாமல் பாதுகாத்தவர், அசிசி நகர், புனித பிரான்சிஸ் என்று, திருத்தந்தையின் இல்ல மறையுரையாளர், அருள்பணி, Raniero Cantalamessa அவர்கள் கூறினார்.

படைப்பைப் பாதுகாக்கும் உலகச் செபநாளையொட்டி, புனித பேதுரு பசிலிக்காவில் இச்செவ்வாய் மாலை நடைபெற்ற வழிபாட்டில் மறையுரை வழங்கிய அருள்பணி Cantalamessa அவர்கள், இயற்கை மீது புனித பிரான்சிஸ் காட்டிய அக்கறையை, அவர் வாழ்வில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் வழியே எடுத்துரைத்தார்.

தரையில் ஊர்ந்து செல்லும் புழுக்கள், மலர்கள் இல்லாத குளிர்காலத்தில் வாடும் தேனீக்கள் அனைத்தின் மீதும் புனித பிரான்சிஸ் அவர்கள் தன் அக்கறையைக் காட்டினார் என்று அருள்பணி Cantalamessa சுட்டிக்காட்டினார்.

இவ்வுலகை ஆள்வதற்கு மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை, இவ்வுலகை அழிப்பதற்குக் கொடுக்கப்பட்ட கட்டளை அல்ல என்பதை,  அருள்பணி Cantalamessa அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

சுயநலத்தின் விளைவாக நாளையத் தேவைகளைக் குவிக்கவேண்டாம் என்ற கருத்தில்தான், இயேசு, "நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்" என்று சொன்னாரே தவிர, 'நாளையத் தலைமுறையினரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்' என்ற எண்ணத்தை இந்த வார்த்தைகளில் புகுத்தவேண்டாம் என்று அருள்பணி Cantalamessa அவர்கள் தன் மறையுரையில் விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.