2015-09-01 15:55:00

திருத்தந்தை : ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போம்


செப்.01,2015. இயேசுவில் வழங்கப்படும் கிறிஸ்தவ ஆறுதல் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல என்ற கருத்தை மையமாக வைத்து, இச்செவ்வாய்க்கிழமை காலைத் திருப்பலியில் மரையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், கோடை விடுமுறைக்குப் பின், இச்செவ்வாய்க் காலையில், பொதுமக்களுடன் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இயேசுவுடன் நடத்தவிருக்கும் இறுதி சந்திப்பு, வெறும் வார்த்தைகளை எதிர்பார்ப்பதாக இல்லாமல், சந்தேகத்திற்கு இடமின்றி, கிறிஸ்தவர்கள், இயேசுவில் ஒருவரை ஒருவர் தேற்றுவதில் பலம்பெறவேண்டும் என்றார்.

இயேசுவின் வருகை, திருடனைப் போல் எதிர்பாராத வேளையில் இடம்பெறும் எனினும், அவரில் விசுவாசம் கொள்வோருக்கு மீட்பைக் கொணரும் என்ற புனித பவுல் அடியாரின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதுடன், உதவுபவர்களாகவும் இருக்கவேண்டும் என்றார். 

வாழ்வோரின் உலகில் இறைவனைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், பழைய ஏற்பாட்டின் யோபுவைப் போல், அத்தனை துன்பங்கள் மத்தியிலும், ஒரு நாள் கடவுளை நேருக்கு நேராக நிச்சயம் காண்போம் என்ற விசுவாசத்தில் வாழவேண்டும் என்றார் திருத்தந்தை.

இறுதி தீர்ப்பிட இயேசு வருவார் என்ற நம்பிக்கையில் நாம் வாழ்வதோடு, அந்த நம்பிக்கையின் சாட்சியாக விளங்குவதே உண்மையான ஆறுதலாக இருக்க முடியும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நல் வார்த்தைகள் மற்றும் நற்செயல்கள் வழியே, ஒருவர் மற்றவருக்கு ஆறுதலாக இருப்போம் என மேலும் கூறினார். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.