2015-09-01 16:33:00

கர்தினால் டர்க்சன் – நீதியின் கனியே அமைதி


கர்தினால் டர்க்சன் –  நீதியின் கனியே அமைதி

 

செப்.01,2015. அமைதியைக் கட்டியெழுப்புவதில், வெறும் கொள்கைகளைவிட, உண்மை நிலைகளே முக்கியத்துவம் வாய்ந்தவை என்று, நீதி அமைதி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் (Peter Turkson) அவர்கள் கூறினார்.

ரியோ டி ஜனெய்ரோ கத்தோலிக்கப் பல்கலைக் கழகம், போர்த்துக்கல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், மற்றும், உரோம் நகரின் கிரகோரியன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, ரியோ நகரில் இச்செவ்வாய் முதல், வியாழன் முடிய நடத்தும் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

பல்வேறு மோதல்களைச் சந்தித்துவரும் இன்றைய உலகில், அமைதி கலாச்சாரத்தை ஊக்குவிப்பது குறித்தும், விவிலியத்தில் காணப்படும் நீதியைக் குறித்தும் தன் உரையின் துவக்கத்தில் பேசிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நீதியின் கனியே அமைதி என்பதை வலியுறுத்தினார்.

நீதிக்கும், வன்முறையற்ற வழிகளுக்கும் ஒருவர் அர்ப்பண உணர்வுடன் செயல்படுவதற்கும், அவரது மனமாற்றத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்பதையும் எடுத்துரைத்த, கர்தினால் டர்க்சன் அவர்கள், அமைதியைக் கட்டியெழுப்புவதில் நாம் கொள்ளவேண்டிய ஈடுபாட்டையும் வலியுறுத்தினார்.

அமைதிக்காகவும், நீதிக்காகவும் உழைக்கவும், செபிக்கவும் நாம் ஒவ்வொருவரும் அழைப்பு பெற்றுள்ளோம் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.