2015-09-01 15:38:00

கடுகு சிறுத்தாலும்... அதிசயமான அறிவுத்திறன்


புல்வெளி ஒன்றில், ஏராளமான ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆயர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவ்வழியே ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியவர், ஆயரை அணுகி, "உங்கள் மந்தையில் இருக்கும் ஆடுகளின் எண்ணிக்கையை நான் சரியாகச் சொன்னால், எனக்கு ஒரு ஆட்டை, பரிசாகத் தருவீர்களா?" என்று கேட்டார். ஆயரும் சம்மதித்தார். காரில் வந்தவர், மந்தையை மேலோட்டமாக ஒரு சில நொடிகள் பார்த்தபின், "இங்கு 973 ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன" என்று சொன்னார்.

தன் மந்தையில் இருந்த ஆடுகளின் எண்ணிக்கையை இத்தனை துல்லியமாகச் சொன்ன அம்மனிதரை வியப்புடன் பார்த்த ஆயர், அவர் விரும்பியபடியே ஓர் ஆட்டை எடுத்துக்கொள்ளச் சொன்னார். அவரும் ஓர் ஆட்டை எடுத்துக்கொண்டு, தன் காரை நோக்கி நடந்தார். அப்போது ஆயர் அவரைத் தடுத்து நிறுத்தினார். "நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பதை நான் சரியாகச் சொல்லட்டுமா?" என்று ஆயர் கேட்டதும், காரில் வந்தவர், "நிச்சயமாக" என்று பதிலளித்தார். "நீங்கள் நமது நாட்டு அரசில், பொருளாதாரத் திட்டங்களை வகுப்பவர். சரிதானே?" என்று ஆயர் சொன்னதும், வந்தவர் பெரிதும் வியந்தார். "அதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்று அவர் கேட்டபோது, ஆயர் அவரிடம், "மந்தையிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த என் நாயை இறக்கி வையுங்கள். நான் சொல்கிறேன்" என்று கூறினார்.

ஒவ்வொருவரின் அறிவுத்திறன் ஒவ்வோரு வகையில் வெளிப்படும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.