2015-09-01 16:05:00

இரக்கத்தைத் தேடிவருவோருக்கு, திருத்தந்தையின் பரிந்துரைகள்


செப்.01,2015. இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் இறைவனின் இரக்கத்தை தேடிவரும் விசுவாசிகளுக்கு உதவும் நோக்குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா (Rino Fisichella) அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில், இதனைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத் தந்தையின் அருகாமையை, இக்காலத்தில் அனுபவிக்கும் விசுவாசிகள், அதனால் பலம் பெறுவதுடன், அந்தக் கருணைக்குச் சாட்சிகளாக வாழ்வார்கள் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், இறை அருளையும் பெறும் நோக்கத்துடன், ஒவ்வொரு விசுவாசியும் இந்த யூபிலி ஆண்டில் அனைத்துப் பேராலயங்களிலும் திறந்துவைக்கப்பட்டிருக்கும் புனித கதவு வழியாகச் சென்று, உண்மையான மனமாற்றத்தைப் பெறவேண்டும் என்று, திருத்தந்தை, இம்மடலில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த யூபிலி ஆண்டில், ஒப்புரவு அருள் அடையாளத்திற்கும், திருநற்கருணைக்கும், விசுவாச அறிக்கையிடலுக்கும், செபத்திற்கும் வழங்கப்படவேண்டிய முக்கியத்துவத்துடன், திருத்தந்தையின் கருத்துக்களுக்காக, சிறப்பான முறையில் செபிக்குமாறு, விசுவாசிகளிடம் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கருக்கலைத்தலை மேற்கொண்டு, அந்தக் குற்ற உணர்வில் துன்புறும் தாய்மார்களுக்கு இறை மன்னிப்பைப் பெற்றுத் தரவேண்டிய அருள் பணியாளர்களின் கடமையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலில் வலியுறுத்தியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.